தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கமான ஒன்று. மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு உள்ளிட்டப் பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. ஆண்டுதோறும் புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் தான் முதலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வெளிநாட்டினரும் வருகை தருவார்கள். தமிழர்களின் பாரம்பரியம் மிக்க விளையாட்டிற்கு உலகம் முழுக்க வரவேற்பு கிடைத்ததை அடுத்து, முதன்முதலாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி சமீபத்தில் நடைபெற்றது. மக்கள் மத்தியில் இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அடுத்ததாக மலேசியாவில் ஜல்லிக்கட்டை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இந்நாட்டில் வருகின்ற நவம்பர் மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவில் ஜல்லிக்கட்டை நடத்த அந்நாட்டு அரசு தீவிரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் ஜல்லிக்கட்டை நடத்த போதுமான இடம் அமையாததால் சில வருடங்கள் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சரியான இடம் கிடைத்திருப்பதால், வருகின்ற நவம்பர் மாதத்தில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம் என அந்நாட்டு எம்.பி. சரவணன் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தாண்டி நம் பாரம்பரிய விளையாட்டு இன்று உலக நாடுகளையும் ஈர்த்துள்ளது என்பது தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். மலேசியா மட்டுமின்றி இனி வரும் காலங்களில் மற்ற நாடுகளிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அதிக வாய்ப்புள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மலேசியாவைச் சேர்ந்த எம்பி சரவணன் முருகன், “தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, சமீபத்தில் இலங்கையில் நடந்தது. இதற்கு கிடைத்த வரவேற்பை முன்னிறுத்தி, எங்கள் நாட்டிலும் ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டோம். அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சரியான இடம் தற்போது தான் கிடைத்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவுள்ளோம். மலேசியாவில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவிருப்பது, நிச்சயமாக இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். அதோடு இந்தியர்கள் இப்போட்டியில் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்தார்.