வரிவிதிப்பு காரணமாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த சில மாதங்களாக சரியான பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் இன்று காலை பிரதமர் மோடியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கடந்த 3 மாதங்களுக்கும் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாத நிலையில், டிரம்பின் தொலைபேசி அழைப்பு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் விரைவில் மோடி - டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் நிச்சயமாக வரிவிதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக இந்தியா கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் வாங்கி வருகிறது. இதனை தடுக்க நினைத்த அதிபர் டிரம்ப், இனி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது; மீறினால் இந்தியா கடுமையான வரிவிதிப்பை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தார். அதோடு அமெரிக்காவில் தயாராகும் பால், நெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் அவர் கோரிக்கை விடுத்தார். எதற்கும் பயப்படாத பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதை உறுதி செய்தார்.
அதோடு அமெரிக்க உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த டிரம்ப் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50% வரிவிதிப்பை விதித்தார். இருப்பினும் கூட எதற்கும் அசராத இந்தயா, அமெரிக்காவின் வரிவிதிப்பை ஒன்றிணைந்து சமாளிப்போம் என பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தது.
வரிவிதிப்பு பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்த நிலையில், திடீரென பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டு பேசியது உலக தலைவர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இருப்பினும் பிறந்தநாள் வாழ்த்து கூறவே டிரம்ப் மோடியைச் தொடர்பு கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
அமெரிக்க அதிபரின் வாழ்த்துக்கு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி நன்றியைத் தெரிவித்துள்ளார். அதில், “பிறந்தநாள் வாழ்த்து கூறிய அதிபர் டிரம்புக்கு நன்றி. அவரைப் போலவே நானும் இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாண்மையை மேம்படுத்த விரும்புகிறேன். மேலும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் மோடி - டிரம்ப் இடையே சுமூகமான உறவு மீண்டும் தொடர வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இருப்பினும் இது நடக்க வேண்டுமானால் வரிவிதிப்பை அமெரிக்கா நிறுத்த வேண்டியது அவசியம் என இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.