
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் தான் மாபெரும் சாதனை ஒன்றையும் பிரதமர் மோடி படைத்துள்ளார். அதாவது இதுவரை வெளிநாட்டு பார்லிமெண்ட்டுகளில் அதிகமுறை உரையாற்றிய இந்தியப் பிரதமர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆட்சி புரிந்த பிரதமர்கள் அனைவரும் இதுவரை ஒட்டுமொத்தமாக 17 முறை வெளிநாட்டு பார்லிமெண்ட்டுகளில் உரையாற்றி உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி மட்டுமே தனியாளாக 17 முறை உரையாற்றி விட்டார் என தற்பேது பாஜக பெருமிதமாக தெரிவித்துள்ளது.
பிரேசில், கானா, அர்ஜென்டினா, டிரினிடாட் & டொபாகோ மற்றும் நமீபியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நேற்று நமீபியாவுக்கு சென்ற போது அந்நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி மோஸ்ட் என்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸின்' விருது நம் இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது. அதோடு அந்நாட்டின் பார்லிமெண்டிலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இத்துடன் வெளிநாட்டு பார்லிமெண்ட்டுகளில் பிரதமர் மோடி உரையாற்றிய எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
பிரதமர் மோடியின் பார்லிமென்ட் உரை குறித்து இன்று பாஜக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இம்முறை பிரதமர் மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் பிரேசில், கானா, அர்ஜென்டினா, டிரினிடாட் & டொபாகோ மற்றும் நமீபியா உள்ளிட்ட நாடுகளின் பார்லிமெண்ட்டுகளில் உரையாற்றி உள்ளார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் பிரதமர்கள் செய்த செயலை, பிரதமர் மோடி வெறும் பத்தே ஆண்டுகளில் நிகழ்த்தி காட்டி விட்டார். இதன் மூலம் உலகளவில் பெரும் மதிப்புமிக்க இந்தியப் பிரதமர் என்ற அந்தஸ்து பிரதமர் மோடிக்கு கிடைத்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இனியும் அவரது சாதனைகள் தொடரும்” என பாஜக பெருமிதமாக கூறியுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் அதிகபட்சமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 7 முறை வெளிநாட்டு பார்லிமெண்ட்டுகளில் உரையாற்றி இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இந்திரா காந்தி 4 முறையும், ஜவஹர்லால் நேரு 3 முறையும், ராஜீவ் காந்தி 2 முறையும் மற்றும் பி.வி.நரசிம்மா ராவ் 1 முறையும் வெளிநாட்டு பார்லிமெண்ட்டுகளில் உரையாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.