
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தை வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருக்கு தேவேந்திர பட்நாவிஸ் உற்சாக வரவேற்பை அளித்தார். மேலும் தடையற்ற வர்த்தகத்தை முன்னெடுத்து நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார் ஸ்டார்மர்.
பிரிட்டன் பிரதமராக ஸ்டார்மர் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இந்தியாவிற்கு இவர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமருடன் 125 பேர் கொண்ட ஒரு குழுவும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இந்தக் குழுவில் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள், தலைமை செயல் அதிகாரிகள், தொழில் குழுமங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பால், உலக நாடுகள் கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் இந்தியா அமெரிக்கா வர்த்தகத்தை தவிர்த்து விட்டு, ஐரோப்பியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று பிரிட்டன் பிரதமர் இந்தியாவிற்கு வந்திருப்பதை சீனா மற்றும் அமெரிக்கா உளளிட்ட நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் மோடி பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் இந்தியாவிற்கு வந்திருப்பது வர்த்தக உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மும்பையில் நாளை உலகளாவிய ஃபின்டெக் திருவிழா நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 99% பொருட்களுக்கான வரியை நீக்கியுள்ளது இங்கிலாந்து. இருப்பினும் இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து சட்டமன்ற செயல்பாட்டிலேயே உள்ளதால், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. 2026 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த வரி ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என இங்கிலாந்து செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உற்றுநோக்கி வருகின்றன.
அமெரிக்காவின் வரி விதிப்பை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த முயற்சியாக ஐரோப்பிய வர்த்தக மாற்றத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் இருவரின் சந்திப்பின்போது உலகளாவிய பிரச்சினைகள், தடையற்ற வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளின் உறவை பலப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.