உலகளவில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையேற்றம் அவ்வளவு பெரிதாக இல்லை. ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. தற்போது தங்கத்தின் விலை முன்பை விட இருமடங்கு ஏறிவிட்டது. தங்க முதலீடு அதிகரிப்பது தான் இதற்கான காரணம் என்று கூறப்பட்டாலும், இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான்.
சர்வதேச பொருளாதாரச் சந்தையில் டாலரின் மதிப்பு நிலையற்றதாக இருக்கிறது. இந்நிலையில் உலக நாடுகள் தங்கத்தை அதிகளவில் வாங்கிக் குவிக்கின்றன. குறிப்பாக தங்க இருப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. சமீப காலமாக உயரந்து வரும் தங்கத்தின் விலையால், அமெரிக்காவின் தங்க இருப்பின் மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
அமெரிக்க கருவூலத்தின் தங்க இருப்பு மதிப்பு சுமார் 1 டிரில்லியன் டாலரைக் கடந்து விட்டது. இதுவரை 8,133 டன்களுக்கும் மேலான தங்கத்தை அமெரிக்கா இருப்பு வைத்துள்ளது. இதில் ஃபோர்ட் நாக்ஸ் கருவூலத்தில் மட்டுமே சுமார் 4000 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பு மதிப்பு சுமார் 261.5 மில்லியன் அவுன்ஸாக இருக்கிறது. நடப்பாண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 45% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 3,825 டாலரை எட்டியுள்ளது.
அமெரிக்க டாலரின் நிலையற்ற தன்மை மற்றும் கருவூலப் பத்திரங்களின் காரணமாக மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு முக்கிய முதலீடாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவும் அதிகளவு தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறது. உலகளவிலான தங்கச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15% எனவும், இதன் மதிப்பு 23 டிரில்லியன் டாலர்கள் எனவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் மற்றும் அதிக வரி விதிப்பு போன்ற காரணங்களால் உலகப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்றே கணிக்க முடியாது. ஆகையால் தான் உலக நாடுகள் பலவும் தங்க முதலீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.
பணத்தின் மதிப்பு சரியும் போது, தங்கத்தைக் கொண்டு பொருளாதாரத்தை சரிசெய்து விட முடியும் என உலக நாடுகள் நம்பிக்கையாக உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பானது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 35% அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் 653 டன்னாக இருந்த தங்க இருப்பு, மார்ச் 2025-ல் 880 டன்னாக அதிகரித்துள்ளது.
உலகளவில் தங்க இருப்பு பட்டியலில் 2015 ஆம் ஆண்டு இந்தியா 10வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டாலரின் நிலையற்ற தன்மையால் பொருளாதாரச் சரிவை சந்திக்க நேரிடும் என்பதால், நிலையான பொருளாதாரத்தை வழங்கும் தங்கத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
கடந்த 2021-ல் 6.86% ஆக இருந்த இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி தங்க இருப்பு, தற்போது 11.35% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் அசுரத்தனமான இந்த வளர்ச்சி சீனாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என உலக தங்க கூட்டமைப்பு கூறுகிறது.