

சென்னையின் மிகப் பழமையான பேருந்து முனையங்களில் முக்கியமானதாக இருக்கும் பிராட்வே பேருந்து முனையம், நாளை மறுதினம் ஜனவரி 7ஆம் தேதி முதல் மூடப்பட உள்ளது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 1964 ஆம் ஆண்டு பிராட்வே பேருந்து முனையம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சென்னை மாநகரம் உள்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து தான் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால், கடந்த 2002 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு அதிகமான பயணிகள் பிராட்வே பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பிராட்வே பேருந்து முனையத்தை மிகப்பெரிய அளவில் பொது போக்குவரத்து முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.822.70 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்றம், வணிக வளாகங்கள், மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், மற்றும் குறளகம் என மக்கள் கூடும் முக்கிய இடமாக பிராட்வே உள்ளது. பிராட்வே பேருந்து முனையத்தை நவீனப்படுத்தும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதன் காரணமாக வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி முதல், பிராட்வே பேருந்து நிலையம் மூடப்பட உள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக ராயபுரம் மற்றும் தீவுத்திடல் ஆகிய இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து முனையம் தயாராகும் வரை, சென்னை மாநகராட்சியில் இயக்கப்படும் MTC பேருந்துகள் அனைத்தும் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் இருந்து தான் இயக்கப்படும்.
மெரினாவில் உள்ள காமராஜர் சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும். கடற்கரை ரயில் நிலையம், மண்ணடி, ஈவெரா சாலை, மற்றும் வியாசர்பாடி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.
நவீன வசதிகள்: பிராட்வேயில் அமையவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையமானது 2 அடுக்கு அடித்தளம், 2 அடுக்கு பேருந்து நிறுத்தம் மற்றும் 6 அடுக்கு வணிக பயன்பாடு என மொத்தம் 10 அடுக்குகளைக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்து முனையத்தில் கிட்டத்தட்ட 1,100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நவீன பிராட்வே பேருந்து முனையத்தில் பல்வேறு நுழைவாயில்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி, ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கான ஒருங்கிணைந்த வசதி, மின்சார பேருந்துகளை சார்ஜ் செய்யும் வசதி, கோட்டை புறநகர ரயில் நிலையத்துடன் இணைப்பு, மெட்ரோ ரயில் நுழைவாயில் உடன் இணைப்பு, NSC போஸ் சாலையை கடப்பதற்கான இணைப்பு, தரமான குடிநீர் மற்றும் நவீன கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்