

தமிழ்நாட்டில் நேற்று (ஆகஸ்ட் 5) தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 6) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டிற்கு முன்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை புகழ்ந்து பேசிய அமைச்சர், ‘கோட் சூட் போட்ட விவசாயி முதல்வர்’ என புகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிக்க வேண்டும் என ஜே.சி.டி.பிராபகர் வலியுறுத்தினார். பிறகு வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து வாசித்தார் அமைச்சர்.
இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சோலார் பம்ப் செட் வழங்க ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சோலார் பம்ப் செட்டுக்கு என்று தனியாக ஒரு தொகை ஒதுக்கப்படுவது வழக்கம். அதேபோல் இம்முறையும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி 1,000 விவசாயிகளுக்கு 80% மானியத்தில் சோலார் பம்ப் செட் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் படி சோலார் பம்ப் செட் வாங்க விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு உடனடி ஒப்புதல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து கொத்தமல்லி மற்றும் மிளகாய் சாகுபடி செய்ய ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1,000 ஏக்கர் பாசனப் பரப்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சேர்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்க 60% பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை உருவாக்கவும், 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளைத் தூர்வாரவும் ரூ.8.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
50% மானியத்தில் 100 விவசாயிகளுக்கு கதிரடிக்கும் களங்களை அமைக்க ரூ.2.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நஞ்சில்லா வேளாண் முறையை ஊக்குவித்து, விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.5 கோடியில் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
விவசாயிகள் அறிவார்ந்த முடிவுடன், அதிக வருமானத்தை ஈட்ட வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகுமா என காத்திருந்த சூழலில், 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்திருக்கிறார். இதற்காக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.648 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பருவ மழை காலங்களில் விவசாயிகளுக்கு கை கொடுப்பது பயிர் காப்பீடு மட்டுமே. ஆனால் தனிப்பட்ட விவசாயிகளின் பாதிப்பிற்கு பயிர் காப்பீடு வழங்கப்படாதது இன்று வரை பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அறிவிப்பு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விலை நிலவரத்தை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் 50 உழவர் சந்தைகளில் மின்னணு விசைப் பலகைகள் மூலம் விலைப்பட்டியலைக் காண்பிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மை பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதை வலுப்படுத்த ரூ.20.31 கேடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.