

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் பருவமழை காலத்தில் பயிர்க் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு உதவும் முக்கிய திட்டங்கள். இந்த வரிசையில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பான திட்டம் தான் ‘பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan)’ திட்டம்.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியான சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பிஎம் கிஷான் (PM Kisan) திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகளுக்கு 23 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிஎம் கிஷான் (PM Kisan) திட்டம் உருவான விதம்:
நாடு முழுவதும் மிகப் பிரபலமான மற்றும் போற்றத் தகுந்த திட்டங்களில் பிஎம் கிஷான் (PM Kisan) திட்டத்திற்கு முக்கிய இடமுண்டு. இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு விதையாக இருந்தது, தெலுங்கானா மாநிலம் தான் என்றால் அது மிகையாகாது.
ஆம், தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்கும் நோக்கத்தில் கடந்த 2018-ல் ‘ரைத்து பந்து’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு காரீப் மற்றும் ராபி ஆகிய இரு பருவங்களில் ஏக்கருக்கு ரூ.5,000 என ஆண்டுக்கு 2 தவணையில் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.
ரைத்து பந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு, உலக வங்கி உள்பட பல்வேறு அமைப்புகள் தெலுங்கானா அரசைப் பாராட்டின. மேலும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதைக் காட்டிலும், ரைத்து பந்து திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிப்பது மிகச் சிறப்பான சிந்தனை என பொருளாதார வல்லுநர்களும் புகழ்ந்தனர்.
விவசாயிகளுக்கு உதவும் இந்த மகத்தான திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தி, 2019-ல் மத்திய அரசு கொண்டு வந்தது தான் பிஎம் கிஷான் (PM Kisan) திட்டம்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட பிஎம் கிஷான் (PM Kisan) திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, இடைக்கால மத்திய பட்ஜெட்டின் போது அமைச்சர் பியூஸ் கோயல் பிஎம் கிஷான் (PM Kisan) திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.75,000 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 2019 பிப்ரவரி 24-ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் முதல் தவணைத் தொகை ரூ.2,000-ஐ சுமார் 1 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு தவணைத் தொகையை தவறாமல் வெளியிட்டு வருகிறார் பிரதமர் மோடி.
பிஎம் கிஷான் (PM Kisan) திட்டத்தில் கிடைக்கும் நிதியுதவியை விதை, உரம் மற்றும் பாசன செலவுக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் கடன் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளது.
தகுதிகள்:
2 ஹெக்டேர் வரையிலான சாகுபடி நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள்.
தேவையான ஆவணங்கள்:
கணினி பட்டா அல்லது சிட்டா
வங்கிக் கணக்குப் புத்தக நகல்
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
விண்ணப்பிக்கும் முறை:
https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் ‘Farmers Corner’ பகுதிக்குச் சென்று, ‘New Farmer Registration’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது கிராமம் அல்லது நகர்ப்புற விவசாயி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி மூலம் உள்நுழையவும்.
புதிய பதிவுக்கான விருப்பம் என்று வந்தால் ‘ஆம்’ என்பதை கிளிக் செய்யவும்.
ஆதார், வங்கிக் கணக்கு மற்றும் நில ஆவண விவரங்களை சரியாக நிரப்பவும்.
அடுத்ததாக தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து ‘Submit’ செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாத விவசாயிகள் இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாநில அரசும் பிஎம் கிஷான் (PM Kisan) திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவ ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், விவசாயிகள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை அணுகலாம்.
e-KYC சரிபார்ப்பு:
பிஎம் கிஷான் (PM Kisan) திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் e-KYC செய்வது கட்டாயமாகும். ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓடிபி-ஐ பயன்படுத்தி விவசாயிகள் e-KYC செய்யலாம். உண்மையான பயனாளிக்கு நிதியுதவி சென்றடைவதை இது உறுதி செய்கிறது. e-KYC செய்யாத பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.