நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
ஆண்டுதோறும் வரும் எதிர்பார்ப்பை போலவே இந்த வருடமும் எதற்கெல்லாம் விலக்கு இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பா வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு வரி அட்டவணை எப்படி மாறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மாத சம்பளம் வாங்குபவர்கள் இடையே அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மாத சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கணக்கான இந்தியர்களின் பார்வை standard deduction எனப்படும் நிலையான வரி விலக்கு மீதே உள்ளது.
உலகளவில் இருக்கும் நிலையற்ற பொருளாதார சூழலில் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முறை ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வரிமுறையின் கீழ் இந்த விலக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிராமாக உயர்த்தப்பட்டது. இது ஓரளவிற்கு பலன் அளித்தாலும் அதன்பிறகு விலைவாசி அதிகரித்து வருவதால் அந்த சலுகை போதுமானதாக இல்லை என்ற கருத்து மாத சம்பளம் வாங்கும் மக்களிடையே நிலவுகிறது.
தற்போதுள்ள பொருளாதார சூழலில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் கூடுதல் பணம் புழங்க வழிசெய்யவும், வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு நிலையான வரி விலக்கை 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சில பொருளாதார பகுப்பாளர்கள் இந்த கட்டணத்தை ரூ.1.20 லட்சம் வரை கூட உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு தனிநபர் ஆண்டுக்கு செலுத்தும் வருமான வரியில் சுமார் ரூ.2500ல் இருந்து ரூ.5000 வரை மிச்சப்படுத்த முடியும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மத்திய அரசின் நீண்டகால நோக்கமான புதிய வரிமுறையை மக்களிடைய அதிகம் பிரபலமாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அமையுமென தெரிகிறது.
அந்த வகையில் நடுத்தர சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் அதிகளவு வருமான வரிச் சலுகையை எதிர்பார்க்கிறார்கள். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை அதிகளவு சேமிக்க வேண்டும், அதேநேரம் வருமான வரி தாக்கல் செய்வதும் ஈசியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும், எதிர்பார்ப்புமாக உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு பட்ஜெட்டில் பெரிய நிவாரணமாக இருந்தது புதிய வரிமுறைப்படி ரூ.12 லட்சம் வருமானத்திற்கு முழுமையாக வரி விலக்கு அறிவித்தது தான். சம்பளம் வாங்குபவர்களுக்கு standard deduction அதாவது நிலையான விலக்கு அறிக்கப்பட்டதால் ரூ.12 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. இதனால் நடுத்தர வருமானம் பெறுபவர்கள் மீது இருந்த வரிச்சுமையையும் கணிசமாக குறைந்தது.
இப்போது புதிய வருமான வரிச்சட்டம் 2025 அமலுக்கு வந்துள்ளதால் பட்ஜெட் 2026-ல் மேலும் வரிக்குறைப்புகள் எளிமையான விதிமுறைகள் மற்றும் சுலபமான சட்ட பின்பற்றல்கள் இருக்கும் என்று வரி செலுத்துவோர் எதிர்பார்க்கிறார்கள்.
பட்ஜெட் 2026-ல் வரி செலுத்துவோர் அதிகமான வருமான வரிச் சலுகைகள், நடுத்தர மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும், இதனால் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகும் சம்பளத்தின் அளவு அதிகமாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். சிம்பிளான, சொல்லவேண்டுமானால் வெளிப்படையான வரிவிதிப்பு முறை இருக்க வேண்டும், IRT filing ஈஸியாக வேண்டும், குறைந்த அளவில் tax notice வரவேண்டும், தெளிவான விதிகள், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் நிவாரணம், பென்ஷன் இவையெல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வரிச்சுமை குறைய வேண்டும், விதிகள் எளிதாக இருக்க வேண்டும், மேலும் வருமான வளர்ச்சி, வேலை வாய்ப்பை ஊக்குவிக்ககூடிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி தளர்வு அறிவிக்கப்பட்டால் அது கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய நிதி நிவாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி விரைவில் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.