இனி பைக் வாங்கினால் 2 ஹெல்மெட் இலவசம்! -அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்!

bike abs
bike absSource:motorids
Published on

உலகளவில் போக்குவரத்து சார்ந்த அதிகளவு விபத்துகள் ஏற்படும் நாடாக இந்தியா  முன்னணியில் உள்ளது. நாட்டில் ஏற்படும் அதிகப்படியான விபத்துகளை குறைக்கவும் , வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒரு  அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வரும் 2026 புத்தாண்டு அன்று முதல் , இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு தொழில்நுட்பமான ஏபிஎஸ்(Anti-lock Braking System - ABS) பொருத்தப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையை அமல்படுத்தும் காலத்தை நீட்டிக்குமாறு , இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. மேலும் , இதற்கான கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தன. இதற்கு காரணமாக அவர்கள் குறிப்பிடுவது ,ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் பொருத்தும் போது அதற்கான செலவு அதிகமாக கூடும், அதன் விளைவால் இருசக்கர வாகனங்களின் விலையும் அதிகரிக்க கூடும் என்று கூறியிருந்தனர். இதனால் , ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை பொருத்துவதில் தளர்வு கேட்டிருந்தனர். ஆனால் , மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் "சாலைகளில் பயணிக்கும் குடிமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறி" இந்த கோரிக்கைகளை திட்டவட்டமாக மறுத்து விட்டது. 

​ABS தொழில்நுட்பத்தின் அவசியம் ஏன்?

இந்த தொழில்நுட்பம் இல்லாத வாகனங்கள் அவசரமாக பிரேக் பிடிக்கும்போது , இரண்டு சக்கரங்களும் சுழல்வது திடீரென்று தடைபடுவதால் , வாகனங்கள் நிலை தடுமாறி சறுக்கிக் கொண்டு விழுந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படுகின்றன. இது போன்ற விபத்துகள் தினசரி அதிக அளவில் இந்தியாவின் நெடுஞ்சாலைகளிலும் சாதாரண சாலைகளிலும் நடைபெறுகின்றன.

இது போன்ற அவசரமான காலங்களில் வாகன ஓட்டிகளின் உயிரினை பாதுகாப்பதில் ABS தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் முழுமையாக தடைபடாமல் , வாகனத்தை ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும். இதனால், ஈரமான சாலைகளிலும், மணல் நிறைந்த பாதைகளிலும் கூட வாகனம் சறுக்காமல் பாதுகாப்பாக நிற்கும்.

​அனைத்து வாகனங்களுக்கும் ABS கட்டாயம்:

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ​அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, ஸ்கூட்டர்கள் மற்றும்  பைக்குகள் உள்பட அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் இந்த விதி பொருந்தும். இனி IS14664:2010 என்ற இந்தியத் தர நிர்ணய விதிகளுக்கு உட்பட்டு ABS வசதியுடன் இருசக்கர வாகனங்களை தயாரிக்க வேண்டும். இது இன்ஜின் திறன் (CC) பாகுபாடின்றி அனைத்து ரக வாகனங்களுக்கும்  பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

இலவச ஹெல்மெட்டுகள்: 

ஏபிஎஸ் விதியுடன் இன்னொரு முக்கிய விதியையும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சேர்த்துள்ளது. அதன்படி , இனி புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும் அனைவருக்கும் , இந்திய தர நிர்ணய அமைப்பால் (BIS) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு தலைக்கவசங்களை வாகன உற்பத்தியாளர்கள் , வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டும். இதன் மூலம் வாகனம் ஓட்டுபவர் மற்றும் அவர்களின் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 

வாகன விபத்துகளின் சிறு தகவல்: 

​கடந்த 2022-ம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியாவில் நடைபெற்ற சுமார் 1.51 லட்சம் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் , 20% பேர் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள். இதைக் கருத்தில் கொண்டு புதிய விதிகள், வாகன் ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமல் படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
2025 REWIND: கார்s & பைக்s... இவைதான் பெஸ்ட்! அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள் மற்றும் 5 பைக்குகள்!
bike abs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com