

ஏற்கனவே பல வகையான புது விதிகள் மற்றும் மாற்றாங்கள் மே மாதத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், வருமான வரி சட்டம் 2025 (Income Tax Act 2025) மற்றும் வருமான வரி விதிகள் 2026-ன் (Income Tax Rules 2026) கீழ் அமலுக்கு வந்துள்ள பான் கார்டு (PAN Card) தொடர்பான புதிய விதிகள் குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1 முதல், பழைய படிவம் 60-க்கு பதிலாக படிவம் 97 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பல்வேறு நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பான் (PAN) அவசியமாக்கப்பட்டது.
முந்தைய விதி 114B-க்கு இணையான வருமான வரி விதிகள், 2026-இன் விதி 159-இன் கீழ், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் அல்லது விற்பனை அல்லது கொள்முதல் போன்ற பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயமாக்கப்பட்டது:
நீங்கள் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக தங்க நகை வாங்கும்போது, பான் கார்டு தரவேண்டிய அவசியமில்லை.
அதுவே ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக தங்க நகைகள் வாங்கும்பட்சத்தில், பான் கார்டு எண் தரவேண்டும் என்கிற விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. பழைய விதிமுறையைப் போலவே, கடந்த ஏப்ரல் 1-ம்தேதிக்கு மேல் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்க நகைகள் அல்லது தங்க கட்டிகளை ரொக்கமாகவோ அல்லது அட்டை மூலமாகவோ வாங்கினால், பான் கார்டு எண் தரவேண்டியது அவசியமாகும்!
வேறு என்னென்ன வாங்குதல்களுக்கு பான் (PAN) கட்டாயம்?
* புதிய விதிமுறையின்படி,ரூ.20 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள நிலம் மற்றும் மனைப் பரிவர்த்தனைக்கு பான் கார்டு எண் தர வேண்டியது அவசியம் ஆகும். இது முன்பு ரூ.10 லட்சமாக இருந்தது.
* ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்கும் போது பான் கார்டு எண் தந்தால் போதும்.
* இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது ரூ.50000க்கு மேல் பிரிமீயம் கட்டினால் மட்டுமே பான் கார்டு எண் தர வேண்டும் என்று இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, அனைத்து இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே பான் கார்டு எண் தரவேண்டும்.
* வங்கியில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும்போதுதான் பான் கார்டு எண் அவசியம் தரவேண்டும். அதற்குக் கீழே இருக்கும் தொகை அளவுக்கு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் பான் கார்டு எண் தரத் தேவை இல்லை என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
* பிரதம மந்திரி தன் யோஜனா கணக்குகளைத் தவிர வேறு எந்த வங்கியிலும் கணக்கு திறப்பது.
* ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் பத்திரங்களை வாங்குதல் அல்லது விற்பனை செய்தல்
* ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் பட்டியலிடப்படாத பங்குகளை வாங்குதல் அல்லது விற்பனை செய்தல்
* ஹோட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும்போது ரூ.1 லட்சத்துக்குமேல் கட்டணம் கட்டவேண்டி இருந்தால் பான் கார்டு எண் தரவேண்டும் என புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. முன்பு இது ரூ.500000 ஆக இருந்தது.
* ஒரு நாளைக்கு ரூ.50,000-க்கு மேற்பட்ட வங்கி வரைவோலைகள், செலுத்து ஆணைகள் அல்லது வங்கியாளர் காசோலைகளை ரொக்கமாக வாங்குதல்.
* வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால், பான் கார்டு எண் தரவேண்டும்.
* கடன் அட்டைக்கு விண்ணப்பித்தல்.
* ரூ.50,000-க்கு மேல் பத்திரங்கள் அல்லது பரஸ்பர நிதிகளை வாங்குதல்.
* டிமேட் கணக்குகளைத் திறப்பது.
பெரும்பாலான முக்கிய வங்கி, முதலீடு மற்றும் அதிக மதிப்புள்ள கொள்முதல் பரிவர்த்தனைகளுக்கு, பான் (PAN) முதன்மைத் தேவையாகிவிட்டது.
நகைகள், பத்திரங்கள் அல்லது நிதி முதலீடுகளைத் திட்டமிடும் வாங்குபவர்கள், பரிவர்த்தனையைத் தொடர்வதற்கு முன் பான் விவரங்கள் மற்றும் இந்த விதிமுறை நன்கு தெரிந்துவைத்துக் கொண்டால், எந்த விதமான குழப்பமும் இல்லாமல், பதற்றம் அடையாமல் இருக்கலாம்!