

தங்கத்தின் மீதான நாட்டு மக்களின் முதலீடு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்தாலும் பொருளாதாரத நிச்சயமற்ற சூழலில் நம்பகமான முதலீடாக கருதப்படுவதால் தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் விற்பனை குறைந்தபாடில்லாமல் நீடித்து வருகிறது.
தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது.
ஆனாலும் இந்திய குடும்பங்களில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையோ, அதன் மீதான விருப்பமோ கொஞ்சமும் குறையவில்லை என்பதை பல தங்கம் சார்ந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படி ஒரு புள்ளி விவரத்தைத்தான் உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.
அதில், இந்திய குடும்பங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 34,600 டன் தங்கம் இருப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது. இது ஆபரணமாகவோ, நாணயமாகவோ, கட்டியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் பார்க்கும் போது, இதன் மதிப்பு சுமார் ரூ.337 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் அதேநேரத்தில், பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிறுக, சிறுக சேர்த்து வைத்த தங்கத்தை பாதுகாப்பதும் பெரிய சவாலாகவே உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வீடுகளில் புகுந்து கொள்ளை , சாலையில் நடக்கும் போது கழுத்தில் இருக்கும் தங்க செயின்கள் பறிக்கப்படுவது போன்ற சம்பவங்களை நாம் அதிகம் காண முடிகிறது. தங்க நகைக்காக உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனால் பெண்கள் தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்லவும் அச்சமாக உள்ளது. தங்கம் விலை அதிகரிக்க அதிகரிக்க, திருட்டு சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளியில் அணிந்து செல்லும் போது தான் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்றால் வீட்டில் வைக்கவும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. அதேசமயம் வங்கி லாக்கரில் வைக்கக்கூடிய நகைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலையே உள்ளது.
நம்முடைய தங்க நகை திருடு போய்விட்டால் நான் என்ன செய்வோம், காவல்துறையில் புகார் அளிப்போம். ஆனால் நம்முடைய திருடு போன நகை நமக்கு கிடைக்குமா என்றால் அதை 100 சதவீதம் நிச்சயமாக கூற முடியாது.
அப்படின்னா நம்மிடம் உள்ள தங்க நகைகளை பாதுகாப்பது எப்படி? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். நம்மிடம் உள்ள நகை திருடு போய் விட்டால் அதற்கு ஈடான தொகையை பெறமுடியும் என்பது எத்தனை பேருக்கும் தெரியும். ஆமாங்க நம்முடைய தங்க நகைகளை காப்பீடு செய்தால் இது சாத்தியம். நம்முடைய வாகனம், வீடு போன்றவற்றிற்கு காப்பீடு செய்கிறோம், ஆனால் தங்க நகைகளுக்கு காப்பீடு ஒன்று உள்ளது என்றே பலருக்கும் தெரிவதில்லை. தற்போது பல நகைக்கடைகளில் நாம் வாங்கும் தங்க நகைகளுக்கு காப்பீடு செய்து தருகின்றனர். அதுமட்டுமின்றி நாம் வாங்கும் தங்க நகைகளுக்கு மில் போடும் போது நாம் காப்பீடு வேண்டும் என்றும் கேட்டு வாங்கலாம்.
நாம் நம்முடைய தங்க நகைகளை காப்பீடு செய்யும் பட்சத்தில் நம்முடைய நகை திருடு போனால் நகையின் மொத்த மதிப்பும் திரும்ப கிடைக்கும். தங்க நகை மட்டுமல்ல, வைரம், வெள்ளி, நவரத்தின நகைகளையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது தங்க நகையை காப்பீடு செய்யும் பட்சத்தில் உங்களின் நகை திருடு போனாலே, வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டாலோ, வெளியில் செல்லும் போது நகை பறிப்பு சம்பவத்தால் உங்களது தங்கத்தை இழந்தால் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும். அதேபோல் வங்கி லாக்கரில் இருந்து களவாடப்பட்டது, தீ விபத்து, வெள்ளப்பெருக்கு , நிலநடுக்கம் போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் உங்களது தங்கத்தை இழந்திருந்தாலும் நிச்சயம் காப்பீடு தொகை கிடைக்கும். அதாவது, தங்கத்தின் மதிப்பில் 95% வரை காப்பீடு தொகையாக கிடைத்துவிடும்.
அதேசமயம், கவனக்குறைவால் காணாமல் போகும் தங்க நகை, மறதியால் காணாமல் போவது, போர், பயங்கரவாதம், கலவரம் போன்ற சூழ்நிலைகளில் உங்களது தங்க நகை மாயமானால் அதற்கு காப்பீடு கிடைக்காது.
உங்களது தங்க நகை காணாமல் போனவுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்து FIR பதிவு செய்து அதன் நகலை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நகலுடன், நீங்கள் தங்க நகை வாங்கியதற்கான ரசீது மற்றும் உங்களின் காப்பீடு திட்ட ஆவணம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் பூர்த்தி செய்து காப்பீடு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனம் இதனை விசாரித்து உங்களது ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் தங்க நகைக்கான தொகையை கொடுக்கும்.
என்ன இல்லத்தரசிகளே, உங்களிடம் உள்ள தங்க நகைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா அப்போ உடனே காப்பீடு செய்வது நல்லது.