
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இரயில் டிக்கெட் முன்பதிவுகள் அனைத்தும் முடிந்து விட்டது. சொந்த ஊருக்குச் செல்ல பொதுமக்கள் பலரும் தீபாவளிப் பண்டிகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் இரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால், சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒருசில தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சென்னையில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி செல்ல மற்றுமொரு சிறப்பு இரயிலை அறிவித்துள்ளது தெற்கு இரயில்வே.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வாரந்திர சிறப்பு இரயில் (வண்டி எண் 06151) 4 வாரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. இதன்படி வருகின்ற செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13 மற்றும் 19 ஆகிய நாட்களில் இரவு 11:50 மணிக்கு சிறப்பு இரயில் புறப்படும். அடுத்த நாள் காலை 8:50 மணிக்கு மதுரையைச் சென்றடையும் இந்த இரயில், மதியம் 1:20 மணிக்கு கன்னியாகுமரிக்குச் செல்லும்.
மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி இரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகின்ற செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14 மற்றும் 20 ஆகிய நாட்களில் மதியம் 3:35 மணிக்கு சிறப்பு வாராந்திர இரயில் (வண்டி எண் 06151) புறப்படும். அன்றிரவு 8:10 மணிக்கு மதுரையைச் சென்றடையும் சிறப்பு இரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
வாராந்திர சிறப்பு இரயிலில் 2AC பெட்டிகள் இரண்டும், 3AC பெட்டிகள் ஐந்தும் உள்ளன. இதஉதவிர 11 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொதுப் பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகளும் உள்ளன.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இரயில் நிலையங்களில் இருமாரக்கத்திலும் வரும் சிறப்பு இரயில்கள் நின்று செல்லும்.
தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் தென் மாவட்டப் பயணிகள் வாராந்திர சிறப்பு இரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.