

என்னதான் பேருந்து, ரெயிலில் அதிகளவு வசதிகள் இருந்தாலும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமானத்தில் தான் பயணித்தாக வேண்டும். பேருந்து, ரெயிலை காட்டிலும், விமானத்திலும் பல மடங்கு டிக்கெட் கட்டணம் இருக்கும். பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த விமான பயணத்தை தற்போது நடுத்தர மக்களும் விமான பயணத்தில் ஆர்வம் காட்டி வருவதுடன் விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசும் அதற்கேற்ற வகையில் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான விமான இணைப்பை அதிகப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறது.
பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது, விமான டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்களை செய்ய முன்வந்துள்ளது.
அதன்படி, எந்த கட்டணமும் செலுத்தாமல் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகளை 2 நாட்களுக்குள் பயணிகள் ரத்து செய்யலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) புதிய வரைவு விதிகளை விதித்துள்ளது.
விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான ‘ரீபண்டு’ பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த விதிமுறையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் விமான டிக்கெட்டை ரத்து செய்வது அல்லது பயணத் தேதியை மாற்றியமைக்கும் வகையில் புதிய விதிகளை அமல்படுத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான பயண டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டாலும், பயணிகளுக்கு பணத்தைத் திரும்ப அளிக்கும் முழுப் பொறுப்பையும் விமான நிறுவனங்களே ஏற்க வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 21 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுத்தாக வேண்டும்.
கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 7 நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும். 48 மணிநேரத்திற்குள் பயணிகள் புதிய பயண தேதிக்கான விமானக் கட்டணம் மாறுபட்டால், அதற்கான கட்டண வேறுபாட்டை மட்டுமே பயணி செலுத்த வேண்டும். மற்றபடி இந்த பயண மாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.
அதேபோல் முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பயணி ஏதாவது பிழையை சுட்டிக்காட்டினால் அதேநபரின் பெயரில் திருத்தம் செய்ய எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் விமான நிறுவனங்கள், பயணிகள் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்டறியப்பட்ட பிறகு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் டிக்கெட் திருத்தப்பட விரும்பும், திருத்தப்பட்ட விமானத்திற்கான வழக்கமான கட்டணத்தைத் தவிர, கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்யலாம் அல்லது திருத்தலாம்.
அதேநேரம், இந்த புதிய விதிமுறைகள் நாட்டில் இயங்கும் உள்நாட்டு விமான பயணமாக இருந்தால் முன்பதிவு செய்த தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும், சர்வதேச விமான பயணமாக இருந்தால் 15 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் இந்த வசதி பொருந்தாது என தெரிவித்துள்ளது. மேலும் விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனத்தின் இணையதளம் வழியாக நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.