
கோவிட் பெருந்தொற்றுப் பிறகு சீனா தனது நாட்டின் மருத்துவத் துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் மற்ற துறைகளைப் போலவே தற்போது மருத்துவத்திலும் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். காபிகேட் நாடு என்ற பெயர் பெற்ற சீனா தற்போது மருத்துவ துறையிலும் தனது பாணியில் விலை அதிகம் உள்ள மருந்து பொருட்களுக்கு பொருட்களை மாற்றாக, விலை குறைவான மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் மனித குலத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் பேசப்படுகிறது.
புற்றுநோய் உயிருக்கே ஆபத்தான மிகவும் கொடிய நோயாக உள்ளது. பொதுவாக புற்றுநோய்க்கான சிகிச்சைகள் பல லட்சங்களை தாண்டி பல கோடிகள் வரை செலவாகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் பல மடங்கு விலை உயர்ந்ததாக இருப்பதால் ஏராளமான எளிய மக்கள் சிகிச்சை பெற வழி இன்றி தவிக்கின்றனர். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க சீன மருத்துவர்கள் ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர். இந்த பரிசோதனை எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை மலிவு விலையில் கிடைக்க வைக்கும்.
ஆன்கோலிடிக் வைரஸ் சிகிச்சை:
சீனாவில் புற்றுநோய்க்கு 11 ஆயிரம் ரூபாயில் சிகிச்சை அளிக்க விஞ்ஞானிகள் ஒரு ஊசியை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் சீனாவின் புதிய சிகிச்சை முறை ஏழை எளிய மக்கள் கூட பலன் பெறும் வகையில் விலை உள்ளது. இந்த ஊசி 'ஆன்கோலிடிக் வைரஸ் மருந்து' என்று அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆபத்தான புற்றுநோய் கட்டிகளை அகற்றுகிறது.
ஆன்கோலிடிக் வைரஸ்கள் புற்றுநோய் செல்களுக்குள் நேரடியாக நுழைந்து, அங்கு வைரஸ்கள் பல்கி பெருகி இறுதியில் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. இந்த வகையில் விஞ்ஞானிகள் இந்த வைரஸ்களை உருவாக்கியுள்ளனர். இந்த வைரஸ்கள் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் புரதங்களையும் வெளியிடுகிறது.
ஆன்கோலிடிக் வைரஸ்கள் பற்றிய ஆராய்ச்சி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் மரபணு பொறியியல் காரணமாக அவற்றின் செயல்திறன் பெரிதும் மேம்பட்டுள்ளது. இதுவரை, இந்த தொழில்நுட்பம் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் மட்டும் உள்ளது. இந்த தொழில்நுட்பம் புதியதல்ல வழக்கம் போல சீனா காபி தான் அடித்துள்ளது. ஆனால் , அதை மிகவும் மலிவான விலையில் தர முனைந்துள்ளது. ஒரு வகையில் வியாபாரம் என்றாலும் கூட மறுபுறம் இது எளியவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாது .
இந்த ஆராய்ச்சி தென் சீனாவின் குவாங்சி மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாவோ யோங்சியாங்கின் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த சிகிச்சை முறையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மற்ற சிகிச்சைகள் தோல்வியடைந்த 58 வயது பெண்மணிக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக அவரது மெட்டாஸ்டேடிக் கட்டிகள் முற்றிலும் மறைந்துவிட்டன.
இந்த சிறிய சோதனையில் 90% கல்லீரல், கருப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளில் உடலில் நல்ல மாற்றம் நிகழ்ந்து குணமடைந்து உள்ளனர். ஆன்கோலிடிக் வைரஸ் சிகிச்சையின் பயன்படுத்தப்படும் CAR-T ஊசியின் தற்போதைய விலை சுமார் ரூ.1.16 கோடி ஆகும். சீனா தயாரித்த ஆன்கோலிடிக் வைரஸ் சிகிச்சையின் ஒரு ஊசியின் விலை ₹11000 மட்டுமே. இதை தொடர்ந்து ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் மொத்த செலவு ரூ.3.3 லட்சமாக உள்ளது. ஒப்பீட்டளவில் இது மிகவும் மலிவு தான்.