உலகம் முழுக்க புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், எளிதில் குணப்படுத்தி விடலாம். ஆனால் புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால், அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியுமே தவிர பூரணமாக குணப்படுத்துவது சற்று கடினம் தான்.
இருப்பினும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் புற்றுநோய் தாக்கத்தைக் குறைத்து விடலாம். அதோடு புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதும் இயல்பானது தான். இருப்பினும் புற்றுநோயைக் குணப்படுத்தவே முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புற்றுநோயைக் குணப்படுத்த பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது ரஷ்யா.
மருத்துவ உலகில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள புற்றுநோய் தடுப்பூசி ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில், தடுப்பூசி குறித்த விவரங்களை ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி 100% செயல்திறனைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பம் தான் புற்றுநோய் தடுப்பூசி தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோய் கட்டிகளை முற்றிலுமாக அழிக்கும் இந்தத் தடுப்பூசிக்கு ‘என்ட்ரோமிக்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதலுக்காக தற்போது மருத்துவக் குழு காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் புற்றுநோய் தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு வந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள ஒருசில புற்றுநோய் மையங்களில் ஆரம்ப கட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்கு மட்டும் என்ட்ரோமிக்ஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் ஆரோக்கியமான திசுக்களையும் அழித்து விடும். ஆனால் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை மட்டுமே அழிக்கும் என்பதால், பக்க விளைவுகள் ஏதும் இருக்காது என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் தடுப்பூசி, சோதனை முயற்சியில் வெற்றி கொண்டதாக ரஷ்யாவின் சுகாதாரத் துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநரான ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் புற்றுநோய் கட்டி வளர்வது தடுக்கப்பட்டதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.
வெகு விரைவில் புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புற்றுநோய் தடுப்பூசியின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.