

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision-SIR) கடந்த 4-ம் தேதியன்று மாநிலம் முழுவதும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த SIR பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையானது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாநிலம் முழுவதும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
கடைசியாக 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் வீடுதோறும் படிவங்களைக் கொடுத்து பூர்த்தி செய்யும் பணி கடந்த நவம்பர் 4-ம்தேதி தொடங்கிய நிலையில் வரும் டிசம்பர் 4-ம்தேதி வரை இந்த பணி நடக்கவுள்ளது.
இதற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும். வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரை பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வெளியிடப்படும்.
அதனால் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வரும் 4-ந்தேதி வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 9-ந்தேதி அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
அந்த வகையில் மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2002, 2005ம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் தற்போது ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. SIR படிவத்தில் பெயர் இல்லாதவர்கள், இணையத்தில் சென்று உங்களது விவரங்கள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதற்கு, 2002ம் ஆண்டில் நீங்கள் வாக்களித்த சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடி நினைவில் இருந்தால் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்கிற இணையதளத்திற்கு சென்று அதில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருந்தால் அப்போதைய வாக்காளர் எண், வாக்குச்சாவடி போன்ற விவரங்களை குறித்துக்கொண்டு https://erolls.tn.gov.in/electoralsearch/ என்ற இணையதளத்திற்கு சென்று அதில் நீங்கள் எடுத்த வாக்காளர் எண்ணை பதிவிட்டு உங்களின் தரவு இத்தளத்தில் வருவதை உறுதி செய்து கொள்ளலாம்.
அதேசமயம் SIR-2002-ல் பெயர் இல்லையெனில் தான் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 13 சான்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல், 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில் 4-ந்தேதிக்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயர் 9-ந்தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். ஆனால் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.