

2026 பொதுத்தேர்தலுக்கான ‘SIR’ பணிகள் தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR)நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வருகின்றனர். இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். அவற்றில் 6,04,68,687 படிவங்கள், அதாவது 94.31 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் கடந்த 17-ம்தேதி தெரிவித்தது. அவற்றில் 61,68,565 படிவங்கள் அதாவது 9.62 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கணக்கீட்டுப்படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு வரும் 25-ந்தேதி வரை 947 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி ‘SIR’ படிவங்களை ஆன்லைனில் நிரப்புவதற்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் ‘SIR’ படிவங்களை பொதுமக்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் ‘Search your name in the last SIR’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, மாநிலத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின்னர் பெயர் மூலம் தேடுதல் அல்லது EPIC எண் மூலம் தேடுதல் ஆகிய இரண்டு விருப்புங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
EPIC எண் மூலம் தேடும் பொழுது, வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணை உள்ளிட்டால், உங்கள் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். பெயர் மூலம் தேடும் பொழுது மாவட்டத்தின் பெயர், சட்டமன்றத் தொகுதியின் பெயர், வாக்காளர் பெயர், தாய்/தந்தை/பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு உங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் இந்த இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளர்.
அதாவது ஆன்லையில் பதிவு செய்யும் போது, ஆதார் அட்டையில் உள்ள பெயர், வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதுடன், வாக்காளர் அட்டையில் மொபைல் எண்ணைப் பதிவு செய்திருந்தால் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.
அந்த வகையில், ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே அதில் ‘லாகின்’ செய்ய முடிகிறது. பின்னர் படிவத்தை பூர்த்தி செய்தவுடன் சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண் ‘OTP’ அங்கீகாரம் கொடுக்கும் போது பெரும்பாலானோருக்கு உங்களது பெயர் சரியாக இல்லை என்றே வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி, ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொதுவாக தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவரது பெயருடன் ‘இனிசியல்’ அல்லது தந்தை பெயரும் முழுமையாக சேர்க்கப்பட்டு இருக்கும்.
ஆனால் வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இருக்கும். அவருடைய ‘இனிசியல்’ சேர்க்கப்பட்டு இருக்காது. தந்தை பெயர் அதற்கு கீழ் தனியாக இருக்கும். இந்த பிரச்சினை தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் உள்ளது என்றும் கூறிய அவர், இந்த பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.