

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி, பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன. அதேசமயம் நாம் கவனமுடன் இல்லையெனில், சைபர் கிரைம் மோசடியில் சிக்கிக் கொள்ள நேரிடும். நாட்டில் இதுவரை எண்ணற்ற சைபர் குற்ற மோசடிகள் நடந்துள்ளன. இதுபற்றி காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் குவிந்து வரும் நிலையில், சிபிஐ விசாரணையும் படுதீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 1,000 கோடி ரூபாயை சுருட்டிய சர்வதேச சைபர் கிரைம் நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளது சிபிஐ. இந்த சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட 58 போலி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 4 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் பகுதி நேர வேலை போன்றவற்றை மையமாகக் கொண்டு, மோசடிகாரர்கள் பொதுமக்களின் ஆசையைத் தூண்டி விடுகின்றனர். இதுதவிர டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரிலும் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பலரும் இதனை உண்மையென நம்பி கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஒருசில நிமிடங்களில் இழந்து விடுகின்றனர். இதன் காரணமாக இன்று காவல் துறையில் ஏராளமான புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர சைபர் கிரைம் மோசடியில் ஏமாந்த சிலர் இன்னும் புகார் கொடுக்காமலும் உள்ளனர்.
சைபர் கிரைம் மோசடியை மிகத் தீவிரமாக விசாரித்து வரும் சிபிஐ, தற்போது சர்வதேச சைபர் கிரைம் கும்பலை அடையாளம் கண்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களை தனித்தனியே விசாரித்து வந்த சிபிஐ, ஒரு கட்டததில் அனைத்து புகார்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
பணப்பரிமாற்ற முறை மற்றும் மொபைல் போன் செயலி ஆகியவை பல புகார்களில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருந்துள்ளன. இதனால் சைபர் கிரைம் வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து விசாரிக்க ‘ஆப்பரேஷன் சக்ரா - வி’ என்ற பெயரில விசாரணையைத் தொடங்கியது சிபிஐ.
சைபர் கிரைம் மோசடிக்கு போலி ஆவணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 11 நிறுவனங்கள் தான் ஆணிவேராக செயல்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் மூலமே பணப் பரிவர்த்தனைகளும் நிகழ்ந்துள்ளன. மேலும் மோசடிகாரர்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஃபின்டெக், கிளவுட் சர்வர்கள் மற்றும் கூகுள் விளம்பரங்களைப் பயன்படுத்தி வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் சட்ட விரோதமான முறையில் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ.1,000 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.152 கோடி பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக திடுக்கிடும் தகவல்களை சிபிஐ வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கிட்டத்தட்ட 27 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ-க்கு, பல குற்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதில் 2 இந்தியர்களின் வங்கி கணக்குகள், வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருப்பது சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஹுவான் லியு, சோ யி, வெய்ஜியன் லியு மற்றும் குவான்ஹுவா வாங் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதால், இது ஒரு சர்வதேச சைபர் கிரைம் நெட்வொர்க் என்பதை சிபிஐ உறுதி செய்தது. இவர்கள் நால்வரும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சில போலி நிறுவனங்களை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இதில் 58 போலி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டவர் நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.