
பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சைபர் பண மோசடிகளைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கூட சைபர் குற்றங்களின் எண்ணகக்கை குறைந்தபாடில்லை. பொதுமக்கள் அதிகளவில் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதால், மோசடிகாரர்கள் மிக எளிதில் சைபர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளில் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது மெட்டா நிறுவனம். இதன்மூலம் இனி சைபர் குற்றங்களைத் தடுக்க முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சைபர் குற்ற மோசடிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் மெடடா நிறுவனம் உள்ளது. ஏனெனில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானவை. இந்நிலையில் பயனர்களை பாதுகாக்கும் பொருட்டு, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் சைபர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை அறிமுகப்படுத்தி உள்ளது மெட்டா நிறுவனம்.
சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை, குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் மற்றும் சலுகை விலையில் பொருள்கள் விற்பனை என பல விளம்பரங்கள் பயனர்களை கவரும் வகையில் உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சிக்கிறது ஒரு கும்பல். கடந்த ஆண்டில் மட்டும் சைபர் குற்றங்களால் ரூ.22,800 கோடிக்கும் மேலான பணத்தை இந்தியர்கள் இழந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சைபர் குற்றங்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தான் நடக்கின்றன. இதனைத் தடுக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா, சைபர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகமில்லாத நபர்களுடன் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசும்போது, மொபைல் போன் திரையை மறைப்பதற்கான எச்சரிக்கை இனி அனுப்பப்படும். இதன் மூலம் வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி தகவல்களை தற்காத்துக் கொள்ள முடியும்.
அதேபோல் பேஸ்புக்கில் மோசடிகளை கண்டறிய ஏஐ அடிப்படையிலான அமைப்பு ஒன்று நிறுவப்பட உள்ளது. மேலும் அவர்களிடமிருந்து குறுந்தகவல்கள் ஏதேனும் வந்தால் எச்சரிக்கை அனுப்பப்படும்.
டிஜிட்டல் பண மோசடிகளில் இருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்க நாடு முழுவதும் மெட்டா நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.