

வரும் 2026-27-ம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் (R3) கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ (CBSE) வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத்தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்க வேண்டும். 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 2 இந்திய மொழிகளையாவது கற்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஒரு பள்ளியால் 6-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் R3 மொழிகள் மட்டுமே, அந்தப் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் விருப்பங்களாகக் கிடைக்கும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆர்.1 வட்டார மொழி அல்லது தாய்மொழி, ஆர்.2 மற்றொரு இந்திய மொழி அல்லது ஆங்கிலம், ஆர்.3 மூன்றாவது மொழி (பெரும்பாலும் கூடுதல் இந்திய மொழி) இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
7 நாட்களுக்குள் இதனை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து இணைவு பெற்ற பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ள சிபிஎஸ்இ, பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அனைத்து பள்ளிகளும் உடனடியாக இதை அமல்படுத்தத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதேபோல், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் இருநிலை தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவது பற்றிய விளக்கத்தையும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 3-வது மொழியைப் பள்ளிகள் முறைப்படி அறிவிப்பதோடு, அதனை ஓ.ஏ.எஸ்.ஐ (OASIS) இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும் என்றும் இந்த நடைமுறையை மண்டல அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள இந்த அவசர நடவடிக்கைக்கு ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
“மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும். தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை என்று தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 6-ம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவு இப்போது கட்டாயமாக்குகிறது; இது கல்விச் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு கட்டாயக் கொள்கை உருவாக்கம்.
பல தசாப்தங்களாக, தமிழ்நாடு எந்தவொரு மொழித் திணிப்பையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது, மேலும் இந்த உத்தரவு அந்தக் கவலைகளை மேலும் வலுப்படுத்துகிறது.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுவாதக் கொள்கைகள், பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முத்தமிட்டிழ் அறிஞர் கலைஞரின் மரபு ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன், மு.க.ஸ்டாலின் தலைமையில் மொழித் திணிப்புக்கான எந்தவொரு முயற்சியையும் திராவிட மாதிரி அரசு தொடர்ந்து உறுதியாக எதிர்க்கும். கல்வி வலுவூட்ட வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக்கூடாது. கொள்கை கலந்தாலோசிக்க வேண்டுமே தவிர, ஆணையிடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.