100% இயற்கை இளநீர்னு ஏமாத்தாதீங்க..! மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவு!

"கெடாமல் இருக்க ரசாயனம், கூடுதல் நீர் சேர்ப்பது நுகர்வோரை ஏமாற்றும் செயல்" - CCPA எச்சரிக்கை.
இளநீர்
இளநீர்source: https://www.barandbench.com/
Updated on

மனிதர்களின் ஆரோக்கியம் காக்க இயற்கை அளித்த கொடை தான் பழங்களும் இளநீரும். இதில் உள்ள சத்துக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் பாதிப்பை நீக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

அதிலும் மனிதர்கள் கை படாத தேவாமிர்தமான இளநீரில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக அதிலுள்ள நீர்ச்சத்து உடலை வெப்பத்திலிருந்து காத்து ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் என்பதால் எந்த உடல்நலப் பிரச்சினைக்கும் மருத்துவம் இதை பரிந்துரை செய்யும்.

மேலும் உடலுக்கு உடனடி சக்தி தரும் கார்போஹைட்ரேட், இதய ஆரோக்கியம், தசை செயல்பாடு, ரத்த அழுத்த கட்டுப்பாட்டுக்கு உதவும் பொட்டாசியம், நரம்புகள், தசைகள், எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் மக்னீசியம், எலும்பு மற்றும் உடல் செல்கள் வளர்ச்சிக்கு உதவும் பாஸ்பரஸ், எலும்பு மற்றும் பற்கள் பலமாக இருக்க உதவும் கால்சியம் மற்றும் உடலின் திரவ சமநிலையை பேணும் சோடியம் இவைகளுடன் தற்போது பெருமளவில் அச்சுறுத்தும் நீரிழிவால் ஏற்படும் சோர்வை குறைக்க அதிலுள்ள இயற்கையான சர்க்கரை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Coconut tree
Coconut tree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் C , உடலை செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்க உதவும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அடங்கிய இளநீர் ஒரு இயற்கை எலக்ட்ரோலைட் பானம் போல செயல்படுகிறது. வெயில் காலம், உடற்பயிற்சிக்கு பிறகு மற்றும் எதிர்பாராத நீர்ச்சத்து குறைபாடு நேரங்களில் இது மிகவும் உதவும் பானமாகிறது.

எனினும் இதையும் அதிகமாக குடிப்பதைத் தவிர்த்து, அளவாக குடிப்பது நல்லது என்றும் குறிப்பாக அதிகளவு சர்க்கரை பாதிப்பு மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

முன்னேறி விட்ட டெக்னாலஜியில் இத்தனை சிறப்பு மிக்க இளநீரும் மாற்றத்துடன் தற்போது பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி இதன் மலிவான விலை மற்றும் இதன் சுவையை விரும்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை வாங்கி அருந்துவதைக் காணமுடிகிறது. காரணம் அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் இளநீரை 100% இயற்கையானது என விளம்பரம் செய்து நம்பகத்தன்மையை வாங்குவோர் இடையே புகுத்துவதுதான்.

இளநீர் மட்டுமல்ல மாம்பழம் போன்ற பழச்சாறுகளுக்கும் இதே நிலைதான். இந்நிலையில் 100 சதவீதம் இளநீர் 100 சதவீதம் மாம்பழச்சாறு என்று உண்மைக்கு புறம்பாக விளம்பரம் செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் இளநீரை 100% இயற்கையானது என்று கூறி விற்பனை செய்யக்கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் 100% இயற்கையானது' எனப் பொய்யான விளம்பரங்களை வெளியிட்ட 'Storia Foods & Beverages' நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது மற்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் பாக்கெட்டுகள், இணையதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் இருந்து "100% இயற்கையானது" போன்ற வாசகங்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் ஆணையம் கண்டிப்பாய் கூறியுள்ளது

மரத்திலிருந்து அவ்வப்போது பெறப்படும் இளநீர் மட்டுமே தூய்மையானது என்ற நிலையில் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இளநீரை '100% இயற்கையானது' அல்லது '100% தூய்மையானது' என்று கூறி விற்பனை செய்யக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

காரணம் இயற்கையான இளநீரை ரசாயனம் சேர்க்காமல் நீண்ட நாட்கள் பாட்டில்களில் சேமிக்க முடியாது. பெரும்பாலான பாட்டில் இளநீர் தயாரிப்புகள், அடர்செறிவில் (Concentrate) இருந்து தண்ணீருடன் சேர்த்து மறுதயாரிப்பு (Reconstituted) ஆகும். ஆகவே பாட்டில்களில் அடைக்கப்படும் இளநீர் கெடாமல் இருக்க அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு, ரசாயனப் பொருட்கள் மற்றும் கூடுதல் நீர் சேர்க்கப்படுவதால், அதனை முற்றிலும் இயற்கையானது என்று விளம்பரப்படுத்துவது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும் என ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும் முன்பக்க அட்டைகளில் 100% இயற்கை என்று மக்களை ஏமாற்றும் வகையில் பெரியதாக வாசகங்களை அச்சிட கூடாது என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் அனைத்து நிறுவனங்களுக்கும் கண்டிப்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்புப் பொருட்களின் தரம், உருவாக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த எந்தவொரு தகவலும் உண்மையானதாகவும், சரிபார்க்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தற்போதைய துரித உணவு கலாசாரத்தில் இயற்கையாக கிடைக்கும் இளநீர் போன்ற பானங்களும் விதிவிலக்கல்ல என்றாலும் நுகர்வோர் இந்த எச்சரிக்கைகளை புரிந்து அடிக்கடி வாங்கி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
ஒன்று கூடிய ராமதாஸ் குடும்பம்: கட்டிபிடித்து கண்ணீர் விட்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி!
இளநீர்
logo
Kalki Online
kalkionline.com