மக்களுக்கு அடுத்த ஷாக்..! கச்சா எண்ணெயை தொடர்ந்து சிமெண்ட் விலை உயர போகிறது..!

கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், இந்தியாவில் இம்மாத இறுதிக்குள் சிமெண்ட் விலை உயரக்கூடும் என நுவாமா நிறுவனம் கணித்துள்ளது.
Cement prices rising
Cement prices risingimage credit-simbacementkenya.com
Published on

ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், அதன் காரணமாக சர்வதேச நாடுகளும் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருவதுடன், இந்தியாவிற்கு மிகப்பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஏனெனில் இந்த போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை ஒரு பேரல் $110-ஐ தாண்டியுள்ளது. மேலும் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் எதிரொலியாக மறைமுகமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கச்சா எண்ணெயில் இருந்து எடுக்கப்படும் பெட் கோக், சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு (Refining) முறையில் கிடைக்கும் பெட் கோக் மற்றும் நிலக்கரி, சிமெண்ட் தயாரிக்கும் உலைகளில் (Kilns) அதிக வெப்பத்தை உருவாக்கப் பயன்படுகிறது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களின் எரிபொருள் கொள்முதல் விலையை மாற்றி, சிமெண்ட் விலையை உயர்த்துகின்றன.

இதையும் படியுங்கள்:
சிமெண்ட் விலை உயர்கிறதா? கட்டுமான தொழில் பாதிப்பு!
Cement prices rising

கடந்த மாதத் தொடக்கத்திலேயே ஒரு சில இடங்களில் சிமெண்ட் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தேவை குறைவு காரணமாக, விலையேற்றம் திரும்ப பெறப்பட்டது. குறிப்பாக, 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே 4 சதவீதம் மற்றும் 7 சதவீதம் சரிவைச் சந்தித்த புதிய கட்டுமானத் திட்டங்கள், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்தில் (2026) 44 விழுக்காடு குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் சார்ந்த உள்ளீட்டுச் செலவுகள் காரணமாக, இந்தியாவில் இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் சிமெண்ட் விலை அதிகரிக்கக்கூடும் என நுவாமா என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகளால் ஏற்படும் பெட் கோக் விலை உயர்வு மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் செலவுகள் அதிகரிப்பு, உற்பத்திச் செலவுகள் மீதான அழுத்தம் ஆகியவற்றின் தாக்கத்தை ஈடுசெய்ய நிறுவனங்கள் முயற்சிப்பதால், டீலர்கள் விலை உயர்வுகளை எதிர்பார்க்கின்றனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது, ‘அதிகரித்து வரும் பெட் கோக் விலை மற்றும் பேக்கேஜிங் செலவுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் விலை உயர்வுகள் இருக்கும் என டீலர்கள் எதிர்பார்க்கின்றனர்’ என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

சிமெண்ட் உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான பெட்ரோலியம் கோக்கின் விலை, பிப்ரவரியில் ஒரு டன்னுக்கு சுமார் 13 அமெரிக்க டாலர் உயர்ந்ததாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கச்சா எண்ணெயுடன் சேர்ந்து இந்தச் செலவுகளும் உயரும்போது, ​​நிறுவனங்கள் இந்த காலாண்டின் பிற்பகுதியில் அதனை சரிசெய்ய சிமெண்ட் விலையை அதிகரிப்பதன் மூலம் இந்த அதிக செலவுகளை வாங்குபவர்கள் மீது சுமத்தக்கூடும்.

மேலும் வரும் வாரங்களில் சிமெண்ட் விலைகள் மற்றும் பெட்ரோலியம் கோக் செலவுகளின் போக்கைப் பொறுத்து சிமெண்ட் நிறுவனங்களின் பங்குச் சந்தை செயல்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதேசமயம் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் சாத்தியமான விலை மாற்றங்களால் சிமெண்ட் நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்படலாம் என்றாலும், தேவை (demand) நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவாக, நுவாமா அறிக்கையானது, சிமென்ட் சந்தையில் தேவை வலுவாக இருந்தாலும், பெட்ரோலியம் கோக் மற்றும் பேக்கேஜிங் உள்ளிட்ட, கச்சா எண்ணெய் சார்ந்த உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதால், மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று சித்தரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
தொடர்ந்து ஏறுமுகத்தில் சிமெண்ட் விலை, கையை பிசையும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள்!
Cement prices rising

சிமெண்ட் விலை உயரும் பட்சத்தில் அதனுடன் சேர்ந்து செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயரும் என்பதால் ரியல் எஸ்டேட் தொழில் அதிகளவு பாதிப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என வல்லூநர்கள் கணித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com