ரெயில் நிலைய குடிநீரில் மனித மல பாக்டீரியா: லிஸ்டில் சென்னை இருக்கா? அதிர்ச்சியளிக்கும் CAG அறிக்கை

இந்தியாவில் உள்ள பல முக்கிய ரெயில் நிலையங்களில் விநியோகிக்கும் குடிநீரில் இ கோலி (E.coli) எனப்படும் பாக்டீரியா கலந்து இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே குடிநீர்
ரயில்வே குடிநீர்AI Image
Updated on

இந்தியாவில் உள்ள பல முக்கிய ரெயில் நிலையங்களின் குறிப்பாக கோவை உள்ளிட்ட முக்கிய 8 ரெயில் நிலையங்களில் விநியோகிக்கும் குடிநீரில் மனித மலத்தில் காணப்படும் ஆபத்தான இ-கோலி (E.Coli) பாக்டீரியா கலந்திருப்பதாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய ரெயில்வேயின் பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ஆபத்தான ஈ.கோலை பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், குடிநீர் தரக்கட்டுப்பாட்டு விதிகளில் கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் தலைமை தணிக்கையாளர் தனது தணிக்கை அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

இது பயணிகளின் உடல்நலத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு (Diarrhoea), இரைப்பை குடல் தொற்றுகள் (Gastrointestinal infections), வாந்தி மற்றும் வயிற்று வலி, டைபாய்டு மற்றும் காலரா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பல நிலையங்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் வாட்டர் கூலர்களில் தூய்மை மற்றும் குளோரினேஷன் சரியாக செய்யப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 12ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்திய ரெயில்வேயில் புறநகர் அல்லாத ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள், சுகாதாரம் என்ற தலைப்பில் சிஏஜி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது.

ரெயில் நிலையங்களின் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள், சுகாதாரம் ஆகியவை எதிர்பார்த்த பலன்களை தந்துள்ளனவா என்பதை அறிய இந்த தணிக்கை நடத்தப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள 6 ரெயில்வே மண்டலங்களில் 512 புறநகர் அல்லாத ரெயில் நிலையங்களில் பயணிகள் சேவைகள் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 49 ரெயில் நிலையங்களில், கோவை மற்றும் பாலக்காடு ஜங்ஷன் (தெற்கு ரயில்வே), ஹைதராபாத் (தென் மத்திய ரயில்வே), மும்பை சிஎஸ்டி, பிவண்டி ரோடு, கல்யாண், லோனாவாலா (மத்திய ரயில்வே) மற்றும் மதுபூர் (கிழக்கு ரயில்வே) ஆகிய 8 முக்கிய ரெயில் நிலையங்களின் வாட்டர் கூலர்களில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் இ.கோலை பாக்டீரியா (உடலுக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியா) கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று, மத்திய ரெயில்வேயில் சத்ரபதி சிவாஜி முனையம், பிவாண்டி, கல்யாண் மற்றும் லோனாவாலா ஆகிய ரெயில் நிலையங்கள், கிழக்கு ரெயில்வேயில் மதுபூர் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் குளிர்விப்பான்களில் குடிநீர் மாதிரிகளில் (ரயில்வே குடிநீர்) இதே இ கோலி பாக்டீரியா கலந்திருப்பது மருத்துவ பரிசோதனை முடிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

குடிநீர் விநியோக அமைப்புகளை முறைப்படி ஆய்வு செய்வதும், குடிநீரில் குளோரின் அளவைக் பரிசோதிப்பதும், பாக்டீரியா மற்றும் ரசாயனக் பகுப்பாய்வு சோதனைகளை மேற்கொள்வதும் போதிய இடைவெளிகளில் சரியாக நடத்தப்படவில்லை.

water sample
water sampleAI Image

குடிநீரில் குளோரின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் 'ஈ.கோலை' உட்பட பிற கோலிபார்ம் பாக்டீரியாக்கள் இருந்தது ரெயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. சீரான குடிநீர் தரக் கட்டுப்பாட்டு விதிகளின்படி செய்யப்பட வேண்டிய பல பரிசோதனைகள் பல இடங்களில் செய்யப்படவே இல்லை.

விதிகளின்படி ஆண்டிற்கு இருமுறை குடிநீரை ரசாயனப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், 11 மண்டலங்களில் உள்ள 179 ரெயில் நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்களால் இந்த ரசாயனப் பரிசோதனைகளே செய்யப்படவில்லை. மேலும் 6 மண்டலங்களில் உள்ள 77 நிலையங்களில் தேவையான இடைவெளியில் சோதனைகள் நடத்தப்படவில்லை.

தணிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 512 ரெயில் நிலையங்களில் கிட்டத்தட்ட 458 ரெயில் நிலையங்கள் (உத்தேசமாக 89%) குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த 458 ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான அத்தியாவசிய வசதிகள் ரெயில்வே துறையால் பரிந்துரைக்கப்பட்ட அளவீடுகளை விட குறைவாகவே இருந்தன.

இதையும் படியுங்கள்:
ரயிலில் ஓசியில் பயணிப்போருக்கு ஷாக் நியூஸ்: அபராதத்தை அதிரடியாக உயர்த்திய ரெயில்வே நிர்வாகம்..!!
ரயில்வே குடிநீர்

கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, ரெயில்வேக்கு அதிக வருவாய் தரும் முன்னணி ரெயில் நிலையங்களான புதுடில்லி, மும்பை, ஹவுரா, சீல்டா போன்றவற்றிலும் பயணிகளுக்கான வசதிகள், குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படையான கட்டமைப்புகள் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

ரெயில் நிலையங்களின் தூய்மைக்காக அதிக நிதி செலவிடப்பட்ட போதிலும், பல இடங்களில் சுகாதாரம் போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சிஏஜி, பின்வரும் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்திய ரெயில்வே குடிநீர் விநியோக அமைப்புகளை ஆய்வு செய்வதற்கும், குடிநீரின் தரத்தைப் பரிசோதிப்பதற்கும் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். சீரான குடிநீர் தரக் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் உள்ள அனைத்துக் அளவுகோல்களின்படியும் முழுமையான குடிநீர் பரிசோதனைகளை ரெயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
எல்பிஜி முதல் ரெயில்வே அபராதம் வரை: நாளை முதல் நம் பட்ஜெட்டை பதம் பார்க்க போகும் மாற்றங்கள்..!
ரயில்வே குடிநீர்

மேலும் இந்த தணிக்கை கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் செப்டம்பர் 2025-இல் பதில் அளித்துள்ள போதிலும், பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய ரெயில்வே மேலும் வலுவான மற்றும் திறமையான அமைப்பை உருவாக்க வேண்டும் என சிஏஜி வலியுறுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com