இனி 12% மேல் ஆல்கஹால் உள்ள இருமல் சிரப், டானிக் வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்!

இந்தியாவில், 12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கொண்ட மருந்துகளுக்கு இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (prescription) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிரப் மருந்துகள்|இருமல் சிரப்
சிரப் மருந்துகள்AI Image
Updated on

கடந்த 2025 ஆம் ஆண்டு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் , பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 'Coldrif' என்ற இருமல் சிரப் மருத்து குடித்த 5 வயதுக்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. அவர்கள் உட்கொண்ட இருமல் மருந்துகள் விஷமாகி, உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தி, உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுத்ததே அவர்களின் மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குழந்தைகள் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட இருமல் சிரப் மருந்தில் டை எத்திலின் கிளைக்கால் என்னும் நஞ்சுப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. இவை உடலில் சிக்கல்களை ஏற்படுத்தி, உடல் உறுப்புகளை செயலிழக்க செய்து பின்னர் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டது. மேலும், இந்த மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் வாங்கி பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து குழந்தைகளில் உயிரிழப்புக்கு காரணமான அந்த மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் மருத்துகள் விற்பனையில் அதிரடி மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் இருமல் மருந்து விற்பனை மீதான தனது கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசு Drugs Rules, 1945 சட்டத்தில் புதிய திருத்தங்களைச் செய்துள்ளது. அதன்படி, இந்தியாவில், 12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் (particularly ethyl alcohol)கொண்ட எந்தவொரு வாய்வழி மருந்தையும் வாங்குவதற்கு, இனி சான்றளிக்கப்பட்ட சுகாதார நிபுணரின் பரிந்துரைச் சீட்டு தேவைப்படும் என்றும், ஆல்கஹால் நிறைந்த இந்த மருந்துகள் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் நேரடியாக வாங்க முடியாது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்ததுள்ளது.

அதாவது, 12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கலந்த இருமல் சிரப்(Syrup), டானிக், டிஞ்சர் வகை உள்ளிட்ட அனைத்து வகையான மருந்துகளை வாங்குவதற்கு இனிமேல் மருத்துவரின் பரிந்துரை சீட்டு (Prescription) கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

30 மில்லிக்கும் அதிகமான பாட்டில்களில் விற்கப்படும், ஆல்கஹால் நிறைந்த இந்த மருந்துகள், முன்னர் எளிதாக விற்பனை செய்ய அனுமதித்திருந்த ஒரு பிரிவிலிருந்து இனி விலக்கு அளிக்கப்படும் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய அரசு ஆல்கஹால் அளவு 12%-க்கு அதிகமாக உள்ள இத்தகைய மருந்துகளை 'Schedule H1' (அட்டவணை H1) பிரிவின் கீழ் கொண்டுவந்துள்ளது. அதாவது, 30 மில்லிக்கு அதிகமான அளவில் விற்கப்படும் ஆல்கஹால் கலந்த அனைத்து திரவ மருந்துகளும் (டானிக்குகள், இருமல் மருந்துகள் போன்றவை) 'Schedule H1' பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

எனவே, 'Schedule H1' பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மருந்துகளை இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் (Registered Medical Practitioner -RMP)வழங்கிய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்க முடியாது.

இருமல் சிரப்
இருமல் சிரப்AI Image

மேலும், இந்த மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக் கடைகள், வாங்குபவரின் பெயர், மருத்துவரின் விவரங்கள், மருந்தின் அளவு மற்றும் மருந்துச் சீட்டு ஆகியவற்றை முறையாக 3 ஆண்டுகள் வரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, ஆல்கஹால் கலந்த பல இருமல் மருந்துகள் (cough syrups) மற்றும் மருத்துவ டானிக்குகளின் விற்பனையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய விதிகளின்படி, இருமல் மற்றும் சளி சிரப்கள் உட்பட, முன்னர் நேரடியாக (Over the counter) கடைகளில் வாங்கப்பட்ட அனைத்து சிரப் மருந்துகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து பரிந்துரையைப் பெற்ற பிறகே மருந்தகங்கள் சிரப் விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், 30 மில்லிக்கு மேற்பட்ட பாட்டில்களை வாங்குபவர்களின் விவரங்களை தனி பதிவேட்டில் பராமரிக்கவும் மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதைக்காக மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், முறையான பயன்பாட்டை உறுதி செய்வதற்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு இருமல் மருந்து: எப்போது ஆபத்தாகிறது?
சிரப் மருந்துகள்|இருமல் சிரப்

தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து :

இருமல் மருந்துகளில் சேர்க்கப்படும் ஒரு வகை ஆல்கஹாலான எத்தனால், திரவ மருந்துகளில் கூறுகளின் கரைதிறனை அதிகரிக்கவும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், அவை ஒருவரின் உடல்நலத்தைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

குறிப்பாக இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், அவை போதைக்கு அடிமையாதல், கல்லீரல் பாதிப்பு அல்லது சேதம் மற்றும் பிற வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதியின் மூலம், சிரப் மருந்துகளின் தவறான பயன்பாடு குறையும் என்றும், நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே மருந்துகளை பயன்படுத்துவதால் உடல்நல பாதுகாப்பு மேம்படும் என்றும் சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மத்திய அரசு செக்..! இனி சாதாரண மருந்து கடைகளில் இருமல் மருந்துகள் விற்பனைக்கு கிடைக்காது..!
சிரப் மருந்துகள்|இருமல் சிரப்

இதனால், இனிமேல் இருமல் சிரப் உள்ளிட்ட எந்த சிரப் மருந்தையும் வாங்கச் செல்லும் முன் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com