“வயசு 16... ஐடியில் 22!” - போலி அடையாள அட்டைகளை உருவாக்கி மது குடிக்க செல்லும் சிறுவர்கள்..!!

Liquor sales
Liquor salesMathrubhumi English
Updated on

"மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு". "மது நாட்டுக்கும், வீட்டுக்கும். உயிருக்கும் கேடு", "மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்" என்பது போன்ற பல விழிப்புணர்வு வாசகங்களை பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். இவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது.

அந்த வகையில் இந்தியாவில் பதின்ம வயதினர் இடையே மது அருந்தும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மிக இளம் வயதிலேயே மது அருந்தத் தொடங்குவதோடு, முன்னெப்போதையும் விட அதிகமாகவும் அருந்துகின்றனர்.

21 வயது நிறைவடையாத பள்ளி சிறுவர்கள் மது அருந்துவது அல்லது போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது என்பது தற்போது தீவிரமான சமூகப் பிரச்சனையாக மாறிவருகிறது. மேலும் இது அவர்களின் உடல் நலம், மன வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை முற்றிலும் சீரழிக்கும் ஒரு சமூக மற்றும் மருத்துவப் பிரச்சனையாகும்.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த கவனம் அவசியம்.

இதையும் படியுங்கள்:
’மது குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்தான் தப்பு; தள்ளிக்கொண்டு வந்தால் தப்பில்லை’ போலீஸ்காரரைத் தாக்கிய பெண்!
Liquor sales

தமிழகத்தில் 21 வயது நிறைவடையாத நபர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு ஏற்கனவே கடுமையான சட்டப்பூர்வ தடையை விதித்துள்ளது. இந்த சட்டத்தை ஏமாற்றி விட்டு பதின்ம வயது சிறார்கள் பப்கள் மற்றும் ரெஸ்டோபார்களுக்கு நுழைவது இன்று சர்வ சாதாரணமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பெரும்பாலான பப்கள், நுழைவாயிலில் நிற்கும் பவுன்சர்களின் வெறும் சரிபார்ப்பை மட்டுமே நம்பியிருக்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் சிறார்கள், எளிதில் போலியாக தயாரிக்கக்கூடிய அடையாள அட்டைகள் அல்லது எடிட் செய்யப்பட்ட போலி ஆவணங்களை பயன்படுத்துகிறார்கள்.

சராசரியாக வார இறுதி நாட்களில் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 40 முதல் 50 சிறார்கள் போலி அடையாள அட்டைகளுடன் உள்ளே நுழைய முயல்கிறார்கள் என்று தனியார் பப்பு உரிமையாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை கூறினார்.

அரசின் 21 வயது சட்டத்தை வெறும் காகித அளவில் மட்டுமே வைக்காமல் களத்தில் முழுமையாக செயல்படுத்த சில நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பவுன்சர்கள் மூலம் ஐடிகளை சரிபார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பப்களில் நுழைவாயிலில் அரசு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களை (ஆதார், ஓட்டுநர் உரிமம்) ஸ்கேன் செய்யும் ‘கியூஆர் கோடு ஸ்கேனர்’ மென்பொருட்களை கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் வயதை மாற்றியமைக்க போலி அட்டைகளை நொடியில் கண்டறியலாம்.

அடுத்தது மூன்று அடுக்கு பாதுகாப்பு முறை. ஒவ்வொரு பப் நிர்வாகமும் சுயக்கட்டுப்பாட்டுடன் இந்த முறையை பின்பற்ற வேண்டும். முதல் அடுக்கில் பவுன்சரால் முதற்கட்ட ஐடி சரிபார்க்க வேண்டும். இரண்டாவது அடுக்கில் ஸ்கேனர் தொழில்நுட்பம் மூலம் ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவது அடுக்கு, பப் மேலாளரின் இறுதி ஒப்புதலுக்கு பின் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

பல சிறுவர்கள் தாங்கள் மது அருந்தவரவில்லை. உணவருத்த வந்திருப்பதாக கூறி உள்ளே நுழைந்த பின்னர் அங்குள்ள பெரியவர்கள் மூலம் மதுவை வாங்கி குடிக்கிறார்கள். இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க 21 வயதுககுட்பட்டவர்களை உணவுக்காக கூட பப்களுக்குள் அனுமதிக்கக்கூடாது.

சுவாரஸ்யமாக, மது அருந்தும் பதின்வயதினரில் 61% பேர் மதுவை விலைக்கு வாங்குவதில்லை. அவர்களில் பலர், பெற்றோரின் அனுமதியின்றி மதுவை எடுத்துக்கொள்வதாகவும், அதைத் திருடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

21 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மது விநியோகம் செய்யும் பப்களின் உரிமத்தை எவ்வித பரிந்துரையுமின்றி நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

சிறுவர்களுக்கு மது விற்பனை செய்வதைத் தடை செய்யும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் சிறுவர்கள் மது அருந்தும் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது அருந்தும் பதின்வயதினர், புள்ளிவிவரங்களின்படி குற்றச் செயல்களிலும், உயிரிழப்பு விபத்துகளிலும் ஈடுபடுவதற்கும், வன்முறைக் குற்றங்களுக்கு ஆளாவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன், அவர்களுடன் ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மது அருந்துவதை நிறுத்திய பின்பு உடலில் நிகழும் மாற்றங்கள்
Liquor sales

தொழில்நுட்ப ரீதியிலான சரிபார்ப்புகளும், கடுமையான காவல்துறையின் கண்காணிப்பு இணைந்தால் மட்டுமே போலி அடையாள அட்டைகளின் மூலம் பப்புக்குள் நுழையும் 21 வயதுக்குட்பட்ட சிறார்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

logo
Kalki Online
kalkionline.com