
ஒருவர் மது அருந்துவதை நிறுத்தும் போது அவரது உடலில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் நிகழ்கின்றன. உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் தன்னைத்தானே சரி செய்யத் தொடங்குகிறது. மதுவை நிறுத்திய பின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடனடி விளைவுகள்:
மதுவை நிறுத்திய 24 மணி நேரத்திற்கு பிறகு ரத்தத்தில் ஆல்கஹால் கலப்பது பூஜியமாக குறைகிறது. கல்லீரல் ஆல்கஹாலின் பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடையத் தொடங்குகிறது. ரத்த சர்க்கரை அளவுகள் நிலை பெறத் தொடங்குகின்றன. உடலில் நீர் சத்தும் தங்குகிறது.
48 மணி நேரம் கழித்து பலர் தங்கள் தூக்க முறைகளில் நிறைய மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். 78 மணி நேரம் கழித்து குறைந்த அளவு மற்றும் குறைந்த காலம் மது அருந்துபவர்கள் அதைக் கைவிடும் போது ஆற்றல், சிந்தனையில் தெளிவு போன்ற முன்னேற்றங்கள் இருக்கும்.
சிலர் அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாகவோ அல்லது நீண்ட காலம் மது அருந்துபவராக இருந்து, அதை திடீரென்று நிறுத்தும்போது அவர்களுக்கு தலைவலி, பதட்டம், வியர்வை, விரைவான இதயத் துடிப்பு, குமட்டல், தீவிரமான பசி போன்றவை ஏற்படும்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
14 நாட்களுக்குப் பிறகு நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. புத்துணர்ச்சியுடன் காலையில் எழுந்திருக்க முடியும். மேம்பட்ட ரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நிறம் பிரகாசமாகும். வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோய்த் தொற்றுகளுக்கான எதிர்ப்புத் திறன் கூடுகிறது. உடலில் இருந்து ஆல்கஹால் வெளியேறுவதால் பசியின்மை ஹார்மோன்களின் செயல்பாடுகள் சம நிலை பெறுகின்றன. சர்க்கரை அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்ண வேண்டும் என்கிற தூண்டுதல் குறைகிறது. உடல் மீண்டும் பழைய வலிமையை அடையும்.
ஒரு மாதத்திற்கு பிறகு:
உடலில் இருந்து நச்சுக்கள் முழுமையாக நீக்கப்பட்டு விடும். மனத்தெளிவு உண்டாகும். தெளிவான சிந்தனை கிடைக்கும். உடலும் மனமும் உற்சாகமடையும்.
கல்லீரல் குணமடைவதை காணலாம். இருதய நோய் அபாயம் குறைகிறது. மேம்பட்ட குடல் ஆரோக்கியம், ஹார்மோன் சமநிலை, புற்றுநோய் அபாயம் குறைதல் போன்றவை ஏற்படும்.
கொழுப்பின் அளவுகள் குறைந்து பக்கவாதம், இதயநோய் போன்றவற்றின் ஆபத்து குறைகிறது. உணர்ச்சிக்கட்டுப்பாடு, மேம்பட்ட மூளை செயல் திறன், ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சி போன்றவை நிகழும்.
திடீரென்று மதுவை நிறுத்தும்போது உடல் சில விதமான அசவுகர்யங்களுக்கு ஆளாகலாம். பதட்டம், தலைவலி, கை, கால் நடுக்கம் அதிகரித்து இதயத் துடிப்பு போன்றவை ஏற்படலாம். ஆனால் இந்த நிலைமை தற்காலிகமானது தான். ஆனால மன உறுதியுடன் மது அருந்தும் தீய பழக்கத்தை கைவிடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளை விளைவிக்கும்.
மதுவை நிறுத்துவது உணர்ச்சி ரீதியான விஷயம் தான். அறிவை உணர்ச்சி வெற்றி கொள்ளும் போது மீண்டும் மதுவுக்கு அடிமையாக நேரிடலாம். எனவே சரியான உறுதியான மனது தான் மிகவும் முக்கியம். மதுவைக் கைவிடுவதன் மூலம் தனக்கு மட்டுமல்ல, தனது குடும்பத்திற்கும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை செய்கிறோம் என்பதை நினைக்கும் மனிதர்கள் மீண்டும் அதனை நாடுவதில்லை.