

ஆரோக்கியமான மக்களைப் பெற்று ஒரு நாடு வளமுடன் இருக்க அடிப்படை காரணமாக அமைகிறது சுகாதாரம். ஒவ்வொரு வீடும் தூய்மையுடன் இருந்தால்தான் அந்த வீட்டில் வசிப்பவர்கள் நலமுடன் இயங்கி வெற்றி பெற முடியும். வீட்டினுள் தேங்கும் அன்றாடக் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி நல்ஆரோக்கியம் பெறுவதே நமது கடமை.
அந்தக் காலத்தில் மக்கிப்போகும் வகையில் இருந்த குப்பை கூளங்கள் மீண்டும் உரமாகி மரமாகி இயற்கையுடன் இணைந்தது. இந்தக் காலத்தில் செயற்கையாக பெருகிய எண்ணற்ற பொருள்களால் குப்பைகளிலும் மாற்றம் வந்து மக்காத குப்பையாகிவிட்டது. காலப்போக்கில் மாநகராட்சிகள் வீட்டுக் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக அரசு தூய்மைப் பணியாளர்களை நியமித்ததோடு மக்களுக்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டது.
சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல், பராமரித்தல் , குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பணிகள், மழைநீர் வடிகால் அமைத்தல், பராமரித்தல், குப்பை சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பழைய சோபா, மெத்தை உள்ளிட்ட கனரக கழிவுகளை வீடுகளுக்கே சென்று சேகரித்தல் , பூங்காக்கள், மரங்கள் மற்றும் பசுமைப் பகுதிகள் பராமரிப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு , கொசு ஒழிப்பு மற்றும் பொது சுகாதாரப் பணிகள், கட்டிட அனுமதி, சொத்து வரி உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள், தெருநாய் கட்டுப்பாடு மற்றும் விலங்கு நல நடவடிக்கைகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் பராமரிப்பு போன்ற நாடு முழுவதும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
பழைய அரசு கொண்டு வந்த சுகாதார பணிகள் சார்ந்த திட்டங்களில் ஒன்றுதான் சென்னை மாநகராட்சியின் பழைய பொருட்களை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் திட்டம். மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இது 2025 அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
புதிய அரசு பொறுப்பேற்ற பின்னும் பழைய அரசின் திட்டங்கள் பெயர் மாற்றத்தோடு தற்போதும் செயல்பாட்டில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த திட்டமும் செயல்பாட்டில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நம் வீட்டில் நீண்ட வருடங்களாக பயன்படுத்தப்பட்டு தேவையில்லை என்று நினைக்கும் சோபா உள்ளிட்ட திடக்கழிவு பொருள்களை என்ன செய்வது எப்படி கழிப்பது என்ற கவலையே இனி வேண்டாம். பழைய சோஃபாக்கள், மெத்தைகள், பழைய மரச்சாமான்கள், பழைய உடைகள்
போன்ற வீட்டில் தேங்கியுள்ள பழைய பெரியதான திடக்கழிவுப் பொருட்களை சென்னை மாநகராட்சி வீடுகளுக்கே வந்து சேகரிக்கிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சேவை நடைபெற்றாலும் மாநகராட்சி பணியாளர்கள் தானாக வந்து எடுத்துச் செல்வதில்லை என்பதை அறியவும். சென்னை மாநகராட்சி செயலியில் முன்கூட்டியே பதிவு செய்தால் மட்டுமே வந்து பெற்றுக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் 3 வழிகளில் தகவல் தெரிவிக்கலாம்: “நம்ம சென்னை” எனும் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அத்துடன் எளிய வழியாக
பிரத்யேக WhatsApp: 94450 61913 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பலாம்.
பதிவு செய்தவர்களின் முகவரிக்கு மாநகராட்சி பணியாளர்கள் சனிக்கிழமையன்று நேரடியாகச் சென்று பொருட்களை சேகரிக்கின்றனர்.அப்படி
சேகரிக்கப்படும் பொருட்கள் முறையாக பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அறிவியல் முறையில் அகற்றப்படுவது சிறப்பு. .
மாநகராட்சியின் சமீபத்திய தகவலின்படி, 2026 ஆகஸ்ட் 29 அன்று மட்டும் 74 இடங்களில் இருந்து 25.2 மெட்ரிக் டன் பழைய சோஃபா, மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 ஜனவரி 10 நிலவரப்படி ஏற்கெனவே 1,769 பேரிடமிருந்து 664.68 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்ததாகவும் மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு மக்கள் பெரும் ஆதரவு தந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 11ல் இருந்து இதுவரை 39.93 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் என்ன பயன் என்று நினைக்க வேண்டாம். சோஃபா, மெத்தை போன்ற பெரிய பொருட்களை தெருவோரம் அல்லது குப்பைத்தொட்டியில் போடாமல், மாநகராட்சியே வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்வதால் சாலையோரக் குப்பை மற்றும் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவது குறையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அத்துடன் அதனால் ஏற்படும் மாசுபாடுகள் தரும் உடல்நலக் கேடுகளும் தவிர்க்கப்படும்.
இந்தச் சேவைக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை ஆதலால் தாராளமாக சென்னை வாழ் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி சுகாதாரத்தை பேணலாம். மேலும் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டால் நல்லது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது