

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கையை (சொத்துவரி உயர்வு) உடனடியாக நிறுத்தி வைப்பதாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சொத்து உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்து உரிமையாளர்களுக்கு அண்மையில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி தொடர்பான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து, ஏற்கெனவே செலுத்தி வந்த சொத்து வரியைவிட அதிகமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் புகார் அளிக்க ஏராளமான மக்கள் திரண்டனர்.
இந்த விசயம் செய்திகளில் பேசுபொருளானதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை எனவும், குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த இடங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, சொத்து வாங்கும்போது அல்லது பதிவு செய்யும்போது இருந்த நிலம் மற்றும் கட்டடத்தின் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு வரி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் கட்டடத்தின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ப வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இதனிடையே, சொத்து வரி உயர்த்தப்படுவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் கலந்து ஆலோசிக்கவில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குற்றம்சாட்டியதுடன், சொத்து வரி மறு மதிப்பீடு செய்தது குறித்த தெளிவான தகவலை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது.
ஆனால், இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து தொடர் கோரிக்கைகள் பெறப்பட்டன.
இக்கோரிக்கைகளைக் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, உயர்த்தப்பட்ட வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய அளவிற்கே மீண்டும் கொண்டு வரப்படும்.
மேலும், மாற்றியமைக்கப்பட்ட புதிய வரித்தொகையை ஏற்கனவே செலுத்திய உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்திய கூடுதல் தொகை வீணாகாது என்றும், அத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை மாநகராட்சியில் வருவாயைப் பெருக்கவும், வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களையவும் மண்டல அளவிலான அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பல வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களின் பரப்பளவு மற்றும் பயன்பாடு சரியாகக் கணக்கிடப்படாமல், குறைவான மதிப்பீட்டில் சொத்துவரி செலுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அத்தகைய சொத்துகளுக்குத் திருத்திய அமைக்கப்பட்ட புதிய சொத்துவரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது.
இருப்பினும், திடீரென விதிக்கப்பட்ட இந்த வரி உயர்வால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர்கள், சரியான கால அவகாசமும் முன்அறிவிப்பும் இன்றி வரி உயர்த்தப்பட்டதாகப் புகார்களை எழுப்பினர்.
மேலும் வரி மாற்றியமைப்பு குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் அந்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போது சொத்துவரி மாற்றியமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே நடைமுறையில் உள்ள பொருளாதாரச் சூழலில் இந்த கூடுதல் வரிப் சுமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சிக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை அனுப்பி வந்தனர். பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தற்போது சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.