
தமிழகத்தில் பொதுமக்கள் அரசு சேவைகளை பெற வேண்டுமெனில் பல நாள்கள் அதற்காக அலைய வேண்டி இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் இதற்காக அடிக்கடி லீவு போட முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்படியே லீவு போட்டாலும் ஒன்று அல்லது 2 நாட்களில் அரசின் சேவைகளை பெறமுடியாது என்பதாலும், அதேநேரம் அதிக நாட்கள் வேலைக்கு லீவு போட முடியாது என்பதாலும் வேலைக்கு செல்பவர்களில் நிறையபேர் அரசின் சலுகைகளை பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். மக்களின் கஷ்டத்தை அறிந்த தமிழக அரசு தற்போது புதிய சேவையை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே இந்த சேவையை பெறமுடியும். இந்த திட்டத்தின் மூலம் அரசின் 35 சேவைகளை நீங்கள் பெற முடியும். அரசின் இந்த சேவையை பெற என்ன செய்ய வேண்டும் என்று இங்கே அறிந்துகொள்ளலாம்.
பொதுமக்கள் அனைவரும் அரசின் சேவைகளை எளியமுறையில் பெற வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தின்படி சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் அரசின் 35 சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாக பெற முடியும்.
இதற்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டிய தேவையே இல்லை. இதற்காக சென்னை மாநகராட்சி 9445061913 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் மக்கள் உங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற இந்த எண்ணுக்கு ‘ஹாய்’ அல்லது ‘வணக்கம்’ என்று ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
பின்னர் சென்னை மாநகராட்சியின் சேவைகளை அதில் உள்ள உரிய வழிகாட்டலுடன் உள் நுழைந்து பெற்றிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான அரசு சேவையைத் தேர்வு செய்ய, மெசேஜில் வரும் விருப்பங்களின்படி பதிலளிக்கவும். அனைத்து சேவைகள் என்பதை கிளிக்செய்து உள்ளே சென்று இந்த பட்டியலில் ஆவணங்கள் பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் என 35 சேவைகளின் பட்டியலை காட்டும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ய வேண்டும்.
அதாவது பிறப்பு சான்றிதழ் என்பதை தேர்வு செய்து உள்ளே சென்று அது கேட்கும் விவரங்களை ஒவ்வொன்றாக பதிவு செய்து கொண்டே வந்தால் கடைசியில் வாட்ஸ் அப்பிலேயே பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இதில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவு, தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், கடை வாடகை செலுத்துதல், கட்டடம் மற்றும் கட்டுமான கழிவுகள் தொடர்பான பதிவு உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் 35 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலுமின்றி தாங்கள் இருந்த இடத்திலிருந்து இந்த வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற்றிட முடியும். இதில் மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாட முடியும்.
இவ்வாறாக தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்ஆப் சேவையானது மக்கள் அலைச்சல் இல்லாமல் எளிதாக கிடைக்கப் பெற்று பலன் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.