கனமழையும் பலத்த காற்றும் வீசும்போது எப்படி எதிர்கொள்வது? சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவுறுத்தல்கள்

வடகிழக்குப் பருவமழை: சென்னை மாநகராட்சியின் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
Water logging after heavy rain
Rain Image : (Arvind Yadav/HT Photo)
Updated on: 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்நினோவினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழலை எதிர்கொள்வது தொடர்பாக அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை காலத்தில், சென்னையில் அடிக்கடி கனமழையும், பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது. மழையுடன் வீசும் பலத்த காற்றினால் உடனடி கவனம் தேவைப்படும் அவசர நிலைகளை உருவாக்கக்கூடும். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடர்பான எந்தவொரு அவசரநிலையையும் திறம்பட சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை மற்றும் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்:

  • குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWAs) மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் மண்டல அளவில் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

  • பாதிக்கப்படக்கூடிய/பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, ஊடகங்கள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்புகள் (Public Announcement Systems) மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

  • அந்தந்த மண்டலங்களில் உள்ள முதற்கட்ட மீட்புக் குழுவினரின் (First Responders) தயார்நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.

  • நிவாரண மையங்களில் போதிய வெளிச்சம், கழிப்பறை வசதிகள், உணவு ஏற்பாடுகள் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் உட்பட தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்.

  • வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களை அருகிலுள்ள நிவாரண மையங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.

  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காவல்துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

  • குறிப்பாகக் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை விரைவாக வெளியேற்றத் தேவையான வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க வேண்டும்.

  • விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பிற தற்காலிகக் கட்டமைப்புகள் அகற்றப்பட வேண்டும்.

  • உயரமான மின்விளக்குக் கம்பங்களின் (High-mast poles) உயரங்கள் குறைக்கப்பட வேண்டும்.

  • லாரிகள், ஜே.சி.பி (JCB) மற்றும் டிப்பர் லாரிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் வாகனங்களும் உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் தேவையான பணியாளர்களுடன், அவசர கால மீட்பு நடவடிக்கை, திடக் கழிவுகள் அகற்றுதல் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

  • விழுந்த மரங்கள் மற்றும் கிளைகளை உடனடியாக அகற்றுவதற்காக, வார்டு அளவில் மின் மர அறுவை இயந்திரங்கள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

  • வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் அவசர கால உபகரணங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு வைக்கப்பட வேண்டும்.

  • முக்கியமான இடங்களில் தேவையான எண்ணிக்கையிலான டீசல் ஜெனரேட்டர்கள் (Diesel Generators) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • கனமழை மற்றும் பலத்த காற்றின்போது பொதுமக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் பொது அறிவிப்புகள் வாயிலாக (Public Announcement System) அறிவுறுத்தப்பட வேண்டும்.

  • கனமழையின்போதும் மற்றும் மழைக்குப் பிறகும் விழும் மரங்கள் மற்றும் கிளைகளைச் சேகரித்து தற்காலிகமாகச் சேமித்து வைக்க ஒவ்வொரு மண்டலத்திலும் பொருத்தமான இடங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட வேண்டும்.

  • நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHCs) போன்ற அத்தியாவசிய பொதுச் சேவை மையங்களில் தேவையான மின் சேமிப்பு கலன்கள் மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மக்களை பாதுகாத்திடும் நடவடிக்கைகளை அலுவலர்கள், பணியாளர்கள் அனைத்து சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
புனித நீராடப் போறீங்களா? ஜாக்கிரதை! – கும்பமேளா பகுதியில் 1,000 மடங்கு நச்சு ரசாயனம்..!!
Water logging after heavy rain
logo
Kalki Online
kalkionline.com