
தீபாவளி பண்டிகை நேற்று (அக்டோபர் 20-ம்தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, உறவினர்களுடன் இனிப்பு, அறுசுவை உணவை பகிர்ந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
கடந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கான பட்டாசுகள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிக இலக்கு வைத்து பட்டாசு உற்பத்தி நடந்தது. இந்த தொழிலுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தீபாவளிக்காக சுமார் ரூ.7000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்கும்போது சில வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
தமிழக அரசு தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பது சுற்றுசூழலுக்கு நல்லது என்று அறிவுறுத்தி இருந்தது.
அந்த வகையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
அதேபோல் பொதுமக்கள் பட்டாசு வெடித்த கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது எனவும், அவற்றை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
பட்டாசு கழிவுகளை வீடுகளில் உள்ள ஈரமான அல்லது உலர் கழிவுகளுடன் சேர்க்கக்கூடாது. பட்டாசு கழிவுகளை சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் குப்பை தொட்டிகளில் கொட்டக்கூடாது. தனியாக கோணி பைகளில் வைத்து அவற்றை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கடந்த (2024) தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் மட்டும் 319.26 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பட்டாசு கழிவுகளால் மற்ற கழிவுகளில் நச்சுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அவை தரம்பிரித்து சேகரிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி இந்த கழிவுகளைத் தரம்பிரித்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள தீங்கு விளைவிக்கும் கழிவு சேகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பியது.
இதில், கடந்தாண்டு தீபாவளி நாளான அக்.31-ம்தேதி 53.86 டன் பட்டாசு கழிவுகளும், நவ.1-ம்தேதி 178.56 டன் பட்டாசு கழிவுகளும், நவ.2-ம்தேதி 86.84 டன் பட்டாசு கழிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் குப்பை, கழிவுகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகள், தனி கவனம் செலுத்தி வருகிறது. வெடி மருந்துகள் நிறைந்த பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொதுமக்கள் பட்டாசு வெடித்த கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல் அவற்றை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.