

இந்தியா முழுவதும் வருகின்ற செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. நாடு முழுக்க வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழா என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட இயற்கையான கடற்கரை பகுதிகளில் இரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
அதோடு கடலோர சுற்றுச்சூழலும் பெருமளவில் மாசடையும். இதனைக் கட்டுப்படுத்தவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாத பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது
இயற்கையான நீர்நிலைகள் மற்றும் கடலின் நேரடி நீரோட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆகையால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளைக் கரைப்பதற்குப் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி தற்காலிகமான நீர்த் தொட்டிகள் அல்லது நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட இருக்கும் சூழலில், மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விநாயகர் சிலைகளுக்கு கண்கவர் வண்ணங்களைப் பூசுவதற்கு செய்றகை இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனைத் தடுக்க ஏற்கனவே தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற நச்சுத்தன்மை உடைய இரசாயன வண்ணப் பூச்சுகள் பயன்படுத்தப்பட்ட விநாயகர் சிலைகளைத் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது குற்றமாகும். மேலும் இரசாயனங்கள் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பான மத்திய மற்றும் மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களை அனைவரும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் தடை உத்தரவை மீறி கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதைத் தடுப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.