

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி குடமுழுக்கு பெருவிழா நடைபெற இருக்கிறது. இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், மதுரையில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் கும்பாபிஷேக தினத்தன்று (செப்டம்பர் 17) கோயிலைச் சுற்றி இருக்கும் 4 மாட வீதிகளில் உள்ள கட்டடங்கள் மற்றும் மேற்கூரைகளின் மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தடை விதித்துள்ளது மதுரை மாநகராட்சி. கும்பாபிஷேகத்தின் போது கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பாரா விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7:40 மணி முதல் காலை 8:10 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கோயில் கும்பாபிஷேகம் இது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் முதுநிலை கோயில்களில் செல்போனை பக்தர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு மையங்களில் 5 ரூபாய் கட்டணத்தில் செல்போன்களை பக்தர்கள் பாதுகாப்பாக வைத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களிலேயே இந்தத் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இதன்படி தற்போது கோயில்களில் செல்போனை வழக்கம் போல் எடுத்துச் செல்லலாம்.
இதற்கு முன்னதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்குப் பிறகு சுமார் 17 வருடங்கள் கழித்து அடுத்த வாரம் நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கும்பாபிஷேக பெருவிழா இதுவாகும்.
கும்பாபிஷேகத்தின் போது எண்ணற்ற போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கட்டடங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகளின் மீது பொதுமக்கள் ஏறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.