

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அறிமுகமானதற்குப் பிறகு அனைத்து துறைகளிலும் தனக்கான இடத்தைப் பிடித்து விட்டது. ஏஐ வரவால் பணியாளர்களின் வேலைக்கு ஆபத்து என ஆரம்பக் கட்டத்திலேயே சொல்லப்பட்டது. அதற்கேற்ப முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அடுத்த சில ஆண்டுகளில் மனித குலமே அழியும் என ஏஐ ஆராய்ச்சியாளரான ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்தார். இந்த எச்சரிக்கையை விடுத்த கையோடு, தனது பதவியையும் அவர் ராஜினாமா செய்தது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்திற்கு எதிராக ரோபோக்களும் போர்க்கொடி தூக்கிய சம்பவம் போலந்து நாட்டில் நடந்துள்ளது.
போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் இருக்கும் டிஜிட்டல் விவகார அமைச்சகத்திற்கு முன்பாக, ஏஐ-க்கு எதிராக 30 ரோபோக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தால் வருங்காலத்தில் மனிதர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்நிவையில் மனிதர்களுக்கு ஆதரவு தரும் வகையில் 30-க்கும் மேற்பட்ட மனித உருவிலான ரோபோக்கள் பதாகைகள் மற்றும் போர்க்கொடிகளை ஏந்தி, அணிவகுத்து நின்றன.
“வேலைகளைப் பாதுகாப்போம்.! AI-க்கு கட்டுப்பாடுகள் வேண்டும்” என்ற கோஷங்களுடன் ரோபோக்களின் இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
Democratism என்ற சமூக அமைப்பைச் சேர்ந்த நபர்கள் இந்தப் போராட்ட நிகழ்வை ஏற்பாடு செய்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி ரோபோக்களின் அசுரத்தனமான வளர்ச்சியால் உலகளவில் மனிதர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். AI பயன்பாட்டை முறையாக நெறிமுறைப்படுத்த அரசு கடுமையான சட்ட விதிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஏஐ தொழில்நுட்பத்தை நேரடியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, வருங்காலத்தில் ரோபோக்களே வேலை இழப்பைச் சுட்டிக் காட்டினால் எப்படி இருக்கும் என்ற விழிப்புணர்வு முறையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. உலகளாவிய சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவே இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையைப் பறிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சீரழித்து விடும் என ஐநா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்க கோடிக் கணக்கிலான லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதால் இது உலகளாவில் தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
ரோபோக்கள் அறிமுகத்திற்கு வந்த போது, இதனால் மனிதர்களின் வேலை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரோபோக்களை விடவும் அதிசக்தி வாய்ந்த ஏஐ தொழில்நுட்பம் தற்போது உலகையே ஆள்கிறது.
வருங்கால பாதிப்புகளை எடுத்துரைககும் விதமாக போலந்து நாட்டில் நடத்தப்பட்ட போராட்டமானது, மற்ற நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தை ரோபோ என்ற தொழில்நுட்பமே எதிர்த்த இந்த சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தாலும், மனிதர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இதற்கு முன்பு வரை மனிதர்களுக்கு மனிதர்களே போட்டியாக இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் போட்டியிட வேண்டிய சூழலில் உள்ளனர்.
அதற்கேற்ப ஏஐ வரவால் நிறுவனங்களின் ஆட்குறைப்புப் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் சூழலியல் அரசியலைப் புரிந்து கொண்டு, இந்த டிஜிட்டல் புரட்சியை மனிதர்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும்.