
தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் குழுக்கள், மகளிர் உரிமை தொலை போன்ற திட்டங்கள் வரிசையில் கொண்டு வரப்பட்டது தான் ‘பிங்க் ஆட்டோக்கள்’ வழங்கும் திட்டம். இந்த திட்டம் பெண்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். லைசென்ஸ் வைத்துள்ள, ஆட்டோ ஓட்டத்தெரிந்த தகுதியான பெண் ஓட்டுநர்களுக்கு CNG அல்லது ஹைபிரிட் ஆட்டோ வாங்க தமிழ்நாடு அரசு மானியம் வழங்குவதுடன், ஆட்டோ வாங்க தேவையான மீதி பணத்தை வங்கிகளில் கடன் பெறவும் உதவி செய்கிறது. ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி (commission) "ஊர் கேப்ஸ்" செயலி பயன்படுத்த வழிவகை செய்து தரப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து 250 பிங்க் ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
தற்போது 3-வது கட்டமாக தகுதி வாய்ந்தவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பிங்க் ஆட்டோக்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ம்தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
* ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு (விதவை) முன்னுரிமை அளிக்கப்படும்.
* 20 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) வைத்திருக்க வேண்டியது கட்டாயம். லைசென்ஸ் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
எனவே சென்னையில் உள்ள தகுதி வாய்ந்த ஆட்டோ ஓட்ட விருப்பம் உள்ள பெண்கள், விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
சிங்காரவேலர் மாளிகை,
8-வது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு)
அல்லது
சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு)
சென்னை 600 001.
செப்டம்பர் 15-ம்தேதி கடைசி நாள் என்பதால் அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.