

“லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என எல்லோருக்கும் தெரியும். இருந்தும் சில அலுவலகங்களில் அவை முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் போலீசார் லஞ்சம் கேட்டால் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம் என்றும் நேரடியாகவோ, Whats app மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்போர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது , காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பெரும்பாலானோர் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.இருப்பினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு' தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்பிரிவு மூலம் காவல்துறையில் லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் பெற்று, அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தங்களது பணிகளை செய்வதற்காக லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, பொதுமக்கள் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாக தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.மேலும், இதே எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது: காவல் துறையில் உள்ளவர்கள் உங்களிடம் லஞ்சம் கேட்டால் உடனே 78717 23000 என்ற மொபைல்போன் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் புதிதாக தொடங்கப்பட்ட பிரிவில், கூடுதல் எஸ்.பி., குமரேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால், கூடுதலாக போலீசாரும் நியமிக்கப்படுவர். என்றும் அவர் கூறினார். சென்னை மாநகரில் புதிய பிரிவின் செயல்பாட்டை பார்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள காவல் துறையிலும், படிப்படியாக ஊழல் ஒழிப்பு பிரிவு தொடங்கப்படும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம், ஊழல் குறித்த புகார்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் சென்னை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அது தொடர்பான தொலைபேசி எண்கள், மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.