இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? ஜஸ்ட் ஒரு OTP போதும்..!

Ration Smart Cards
Ration Smart Cards
Updated on

ரேசன் அட்டை தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வரும் ஜூலை 11 ந் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்றும் இந்த முகாம்களில் ரேஷன் கார்டு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்த நல் வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்களாக: ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலர் (Taluk Supply Office) அலுவலகம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட உள்ளூர் முகாம் மையங்கள், மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர் அலுவலகங்கள் அல்லது அறிவிக்கப்பட்ட முகாம் மையங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல்.புதிய முகவரி மாற்றம் மற்றும் பிழை திருத்தம். மேலும் புதிய அட்டை அல்லது நகல் அட்டை கோருதல். கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள் ஆகிய சேவைகளுக்கு இந்த குறைதீர் முகாமை பொதுமக்கள் அணுகலாம்.மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி திருத்தம், செல்போன் எண் மாற்றம் அல்லது புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்காக சிறப்பு முகாமிற்கு செல்லும்போது பொதுவாக சில ஆவணங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அசல் ரேஷன் கார்டு அல்லது அதன் நகல்.குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை, பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனில் அந்த உறுப்பினரின் ஆதார் அட்டையுடன் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், அரசிதழ் (Gazette) போன்றவைகளுள் ஒன்று (தேவை பொறுத்து) , மொபைல் எண் மாற்றம் செய்ய புதிய செல்போன் எண் ஆகியவை, முகவரி மாற்றம் என்றால், புதிய முகவரிக்கான ஆதாரமான மின் கட்டண ரசீது, குடிநீர் வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், ஆதாரில் புதுப்பிக்கப்பட்ட முகவரி போன்றவைகள்,தேவைப்பட்டால் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகளை முகாமிற்கு செல்லும் முன் நமது தேவைக்கேற்ப தயாராக எடுத்துச் செல்ல வேண்டும்.

ration card type
ration card

மேலும் ரேஷன் கார்டிலிருந்து ஒரு நபரின் பெயரை நீக்க வேண்டும் என்றால் காரணத்தைப் பொறுத்து சான்று ஆவணங்கள் தேவைப்படும். மகள் திருமணமாகி வேறு குடும்பத்திற்கு சென்றிருந்தால் – புதிய முகவரிக்கான சான்று அல்லது புதிய குடும்ப அட்டையுடன் தொடர்புடைய ஆவணங்கள் தேவைப்படலாம். குறிப்பாக வேறு வீட்டிற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்திருந்தால் – புதிய முகவரி சான்று அவசியம். வேறு மாநிலம் அல்லது வெளிநாட்டிற்கு நிரந்தரமாக சென்றிருந்தால் – அதற்கான ஆதார ஆவணங்கள் கேட்கப்படலாம்.

இறப்பு காரணமாக பெயர் நீக்கம் செய்யவேண்டும் என்றால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் பொதுவாக ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், குடும்பத் தலைவரின் விண்ணப்பம், அசல் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையும் எடுத்துச் செல்வது நல்லது.சில முகாம்களில் ஆவணங்களின் அசல் மற்றும் நகல் இரண்டையும் கேட்கலாம். எனவே இரண்டையும் எடுத்துச் செல்வது நல்லது. மேலும், விண்ணப்பப் படிவம் முகாமிலேயே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் புதிய ரேஷன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி தற்போது வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை இப்பணிகள் முழுமையாக முடங்கின. புதிய அரசு வந்த பின்னும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படாததால் மக்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர். எனினும், ஆன்லைன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளது இது வரை காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! குறையப்போகுது வீட்டுமனை விலை! தமிழக அரசின் மெகா அறிவிப்பு.!
Ration Smart Cards
இதையும் படியுங்கள்:
#BREAKING: 2,000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றிக் கொள்ளலாம்.! RBI அதிரடி அறிவிப்பு.!
Ration Smart Cards
logo
Kalki Online
kalkionline.com