
இன்று பரபரப்பான வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால இளைய தலைமுறைக்கு, அக்கால அமைதியான கிராமத்து வாழ்க்கையின் அருமையும், பெருமையும் தெரிய வாய்ப்பு இல்லை. எனவே, கிராமிய கலைகளுக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக 2007-ம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி முதல் - அமைச்சராக இருந்தபோது, கனிமொழி எம்.பி., 'சென்னை சங்கமம்' விழாவை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் நடக்கும் இந்த விழாவை பலர் குடும்பம் குடும்பமாக சென்று, பார்த்து, ரசித்து பழைய நினைவுகளை பசுமையாய் அசைபோட்டு, தங்கள் குழந்தைகளுக்கு விளக்கி கூறி மகிழ்கின்றனர்.
இந்த விழா 2011-ல் ஆட்சி மாறியவுடன் நிறுத்தப்பட்டு மீண்டும் 2021-ல் தி.மு.க. ஆட்சி மலர்ந்ததில் இருந்து உயிர் பெற்று, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'வை தமிழ் மையம், தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை ஏற்று நடத்துகிறது. இந்த விழா பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும், நாட்டுபுற, கிராம கலைஞர்களை உற்சாகமூட்டவும் நடத்தப்படுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடலில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து இந்த விழா பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண-சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத்திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் நடக்கிறது.
இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள். இவற்றுடன் மராட்டியா லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவா விளக்கு நடனம், மிசோராம் மூங்கில் நடனம் ஆகியவைகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் இவ்விழா நடைபெறும் நாட்களில் அனைத்து இடங்களிலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் சிறப்பான பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும் வகையில் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.