தமிழகத்தில் தொடரும் வெயிலின் கொடுமை - எப்போது மழை பெய்யும்... வெளியான புதிய தகவல்..!

summer heat
summer heat
Updated on

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயில் மற்றும் அனல் காற்று வழக்கத்தை விட மிகக் கடுமையான சுட்டெரித்து வருகிறது. மே 4-ம்தேதி தொடங்கி மே 28-ம்தேதி வரை நீடித்த கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) பருவம் முழுமையாக நிறைவடைந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் கடந்த நிலையிலும், இன்னும் கோடை வெப்பத்தின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. கத்திரி வெயில் முடிந்த பிறகும் கூட, சென்னையில் வெப்ப அலைகளின் தாக்கம் குறையாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது. எல்-நினோவின் தாக்கம் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ளது.

அதிலும் சென்னை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது, கடந்த 1-ம்தேதியில் இருந்து தினமும் 106 டிகிரிக்கு குறையாமல் வெயில் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.

தென் மேற்கு பருவமழை தொடங்கியும் வெயில் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் 6-வது நாளாக நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 103.82 டிகிரியும் வெயில் கொளுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்..!
summer heat

தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 7-ம்தேதி) 12 இடங்களில் 100 டிகிரி மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், கடலூரில் தலா 105 டிகிரி வெயில் கொளுத்தியது. தொண்டி, நுங்கம்பாக்கம், வேலூரில் தலா 103 டிகிரியும், நாகை, தஞ்சை, பரங்கிப்பேட்டை, திருச்சியில் 102 டிகிரியும், மதுரை நகரம், திருத்தணியில் தலா 101 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.

அதாவது இயல்பைவிட குறைந்தது 2 செல்சியஸ் முதல் 3.4 செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. வெப்பத்தின் உஷ்ணத்தால் சென்னைவாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிலும் சமீப காலமாக சென்னையில் அதிக இடங்களில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வெயிலின் தாக்கம் தற்காலிகமாகத் தணிகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சில தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தொடரும் வெயிலின் உக்கிரத்துக்கு என்ன காரணம்? இதன் தாக்கம் எப்போது குறையும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, வங்கக்கடலில் தாழ்வுப்பகுதி உருவாகாததே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்தார். பொதுவாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது வெப்பம் சற்று குறையும். ஆனால் தற்போது பருவமழை தொடங்கினாலும், வங்கக்கடலில் எந்த வித தாழ்வுப்பகுதியும் உருவாகவில்லை. அவ்வாறு தாழ்வுப்பகுதி உருவாகும் போது மேகக் கூட்டங்கள் வந்து வெப்பம் குறையும். அதற்கான சூழல் இப்போது ஏற்படவில்லை. இதனால் தான் சென்னையில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

இன்னும் 10 நாட்களுக்கு வெப்ப உஷ்ணம் இருக்கத்தான் செய்யும். இடையில் வருகிற 10-ம்தேதிக்கு பிறகு வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த மழை வந்தால் ஓரளவுக்கு வெப்பம் குறைவதற்கான சூழல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) மண்டல சூறாவளி எச்சரிக்கை மைய இயக்குனர் வி.ஆர்.துரை, தென்மேற்குத் திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 20-30 கி.மீ மட்டுமே உள்ளது; இது மேகங்களை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்த்துவதற்குப் போதுமானதாக இல்லை. இருப்பினும், தெற்கு உள் கர்நாடகப் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி தெற்கு நோக்கி நகர்வதை வானிலை மாதிரிகள் காட்டுகின்றன; இது இன்று அல்லது நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) வட தமிழகத்தில் மழையைத் தரக்கூடும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய வானிலை அசாதாரணமானது என்று குறிப்பிட்ட பதிவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், சாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இடியுடன் கூடிய மழை மீண்டும் மீண்டும் நகரை ஒட்டியே சென்றதாகக் கூறினார். மேலும் ஜூன் மாதம் சென்னையில் அதிக மழைப்பொழிவு இல்லாத மாதமாகும். ஆனால், விரைவில் நமக்கு மழை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
ஷாக்கிங் நியூஸ்..!!கூடுதலாக 40 நாட்களுக்கு நீடிக்க போகும் கோடை வெயில்.!
summer heat

இதற்கிடையே நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி, ஈரோடு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com