
சென்னை தீவுத்திடலில் வருடந்தோறும் நடத்தப்படும் பொருட்காட்சியை காண மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில், சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல சிறப்பு அம்சங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படும். இந்த பொருட்காட்சி சென்னை மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பொருட்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரங்குகளும் காட்சி படுத்தப்படும். சிறந்த அரங்குகள் அமைத்த துறைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இந்த பொருட்காட்சியில் இளைஞர்கள், சிறுவர்களை கவரும் வகையில் விளையாட்டு சாதனங்கள், சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
மேலும் சிறிய கடைகள் மற்றும் தனியார் அரங்குகள், பல ஸ்டால்கள், சிறுவர் இரயில், மீன் காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி, 3D தியேட்டர், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பல வேடிக்கைகள், கேளிக்கைகள், விளையாட்டுகள் மற்றும் வித விதமான உணவுகள் போன்ற சிறப்பு அம்சங்களும் இந்த பொருட்காட்சியில் நிறைந்திருக்கும். பெண்களை கவரும் வகையில் ஆடை, செருப்பு, நகைக் கடைகளும் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் தினந்தோறும் அரசு பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
சென்னை வாசிகள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி வரும் 6-ம்தேதி தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏற்பாடு செய்து வரும் இந்த கண்காட்சி 6-ம்தேதி தொடங்கி 70 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதாவது நீங்கள் மார்ச் மாதம் மூன்றாம் வாரம் வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
தற்போது தீவுத்திடலில் அரசின் சாதனைகளை விளக்கும் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதே சமயம் ராட்டினம், குழந்தைகளை கவரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் 46 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் உள்பட 6 பஸ் நிலையங்களின் மாதிரியை பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்தாண்டு பொருட்காட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முருகன் பக்தர் மாநாட்டை போல ஒரு வடிவமைப்பு அரங்கு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு கோவிலின் பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த பொருட்காட்சி விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். கடந்த ஆண்டை போலவே பொருட்காட்சி நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40-ம், சிறியவர்களுக்கு ரூ.25-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.