

இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள், முதுகலைப் படிப்பை தொடர்வதற்கு நேரமில்லாத காரணத்தால் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிப்பது வழக்கம். இதன் மூலம் வேலை பார்த்துக் கொண்டே மேற்படிப்பினை முடிக்கும் வாய்ப்பை சில பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. அதில் முக்கியமானது சென்னைப் பல்கலைக்கழகம்.
கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்ற பட்டதாரிகளை உருவாக்கி வரும் இப்பல்கலைக்கழகத்தின் கீழ், எண்ணற்ற கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் தொலைதூரக் கல்வியை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க 1981 ஆம் ஆண்டு முதல் தொலைதூரக் கல்வி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். இதன்படி தொலைதூரக் கல்வியில் அரியர் வைத்த மாணவர்கள், மீண்டும் தேர்வெழுதி பட்டம் வாங்கிட ஓர் அரிய வாய்ப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது.
தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்தால், பட்டப் படிப்பு காலம் முடிந்த அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அரியர் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதற்குப் பிறகு மீண்டும் அரியர் எழுத அனுமதிக்கப்படாது. இந்நிலையில், 1981 ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வி தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் அரியர் தேர்வை மீண்டும் எழுத, ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்த மாணவர்கள் கூட தற்போது தேர்வை எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பலருக்கும் பாதியில் நின்று போன பட்டப்படிப்பு கனவுக்கு மீண்டும் புத்தூரில் கொடுத்துள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியர் தேர்வை எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் போது படிப்பின் விவரங்கள் மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு கைநழுவிப் போன பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற, அரியர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிய தேர்வு தொடர்பான மேலும் சந்தேகங்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
அடுத்த மாதம் (டிசம்பர்) தேர்வுகள் நடைபெற இருப்பதால் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் அரியர் வைத்த மாணவர்கள் அனைவரும் அதற்கேற்றவாறு தயாராக வேண்டும்.
1981 முதல் செயல்படும் தொலைத்தூரக் கல்வியில் 16 இளங்கலை பட்டப்படிப்புகளும், 22 முதுகலை பட்டப்படிப்புகளும், 19 டிப்ளமோ மற்றும் 15 சான்றிதழ் படிப்புகள் உள்பட மொத்தம் 73 வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் அரியர் வைத்த எண்ணற்ற மாணவர்கள், பட்டம் பெறுவதற்கான கடைசி வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.