
இந்தியாவில் ரயில் நிலையங்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் அலுவலகங்கள் மற்றும் உணவுக் கூடங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யப் தரமான உணவு சான்றிதழ் (Eat Right Certificate) வழங்கப்படுகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) ஈட் ரைட் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே ஈட் ரைட் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். நிறுவனங்களுக்கே ஏற்ப ஈட் ரைட் சான்றிதழின் வடிவம் மாறுபடும். ரயில் நிலையங்களுக்கு ‘ஈட் ரைட் ஸ்டேஷன்’ என்ற பெயரிலும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற பெயரிலும், உணவுக்கூடங்களுக்கு ‘ஈட் ரைட் சென்டர்’ என்ற பெயரிலும், பள்ளிகளுக்கு 'ஈட் ரைட் ஸ்கூல்' என்ற பெயரிலும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது திருச்சியில் மட்டும் 9 அரசு பள்ளிகளுக்கு ஈட் ரைட் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை மத்திய அரசின் உணவுத்துறை ஆய்வு செய்யும். உணவு சமைக்கப்படும் இடம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றோடு உணவின் தரத்தையும் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அவ்வகையில் சமீபத்தில் திருச்சியில் உள்ள 9 அரசுப் பள்ளிகளில் சமைக்கப்பட்ட உணவை உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் மெடிவில் ஒன்பது பள்ளிகளுக்கும் ‘ஈட் ரைட் ஸ்கூல் (Eat Right School)’ சான்றிதழை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கியது. தமிழ்நாட்டில் ஈட் ரைட் சான்றிதழை இதற்கு முன்பு அரசு பள்ளிகள் எதுவும் வாங்கியது கிடையாது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒன்பது அரசுப் பள்ளிகள் ஈட் ரைட் சான்றிதழைப் பெற்றிருப்பது வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஈட் ரைட் சான்றிதழ் பெற்ற ஒன்பது அரசு பள்ளிகள்:
1. அரசினர் மேல்நிலைப்பள்ளி, துவக்குடி, திருச்சி
2. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மன்னாச்சநல்லூர், திருச்சி.
3. அரசினர் மேல்நிலைப்பள்ளி, அன்பில், திருச்சி.
4. அரசினர் உயர்நிலைப்பள்ளி, கண்ணனூர், திருச்சி.
5. அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, கீழன்பில், திருச்சி.
6. அரசினர் மேல்நிலைப்பள்ளி, லால்குடி, திருச்சி.
7. அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
8. அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, துவரங்குறிச்சி, திருச்சி.
9. அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி, திருச்சி.