

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மூலை முடுக்குகளில் எல்லாம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் 1562 விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதன்படி 1 விநாயகர் சிலைக்கு 1 போலீஸ் மற்றும் 3 விநாயகர் சிலைக்கு 1 எஸ்.ஐ. என்ற அடிப்படையில் சென்னை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஜிப்ஸி வாகனங்கள் மூலம் போலீஸார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் விநாயகர் சிலைகளை கரைக்கும் வரை சென்னையில் காவல் துறை பாதுகாப்பு தொடரும்.
சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நீலாங்கரை மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன்படி அரசு நிர்ணயிக்கும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் எனவும் இந்தத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலைகளை கரைக்கும் இடங்கள்:
சென்னையில் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், மற்றும் எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க பிரத்யேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்:
விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலம் செல்லும் போது, பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் தற்காலிக மாற்றங்களும், வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்:
* சென்னையின் முக்கிய சந்திப்புகள் மற்றும் சிலைகள் ஊர்வலப் பாதைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
* காவல்துறை அனுமதித்த நேரத்தைத் தவிர, அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன