

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் விற்பனை நிலையத்தில் இருந்து காலாவதியான நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 26-ம்தேதி அன்று, ஜுகல் கிஷோர் என்பவர் இமாச்சல பிரதேசம் காங்ராவில் உள்ள ஒரு ரிலையன்ஸ் ரீடெய்ல் விற்பனை நிலையத்தில் இருந்து ஒரு பாக்கெட் காரமான கொரியன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை வாங்கினார். அவருக்கு அந்த பாக்கெட்டுக்கான ரசீது, விலைப்பட்டியல் எண் 51 PS எண் R102-இன் கீழ் வழங்கப்பட்டது.
பின்னர் அவருடைய மைனர் மகள் அந்த நூடுல்ஸில் சிறிதளவு சாப்பிட்ட போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து ஜுகல் கிஷோர் அந்த பாக்கெட்டை கவனமாக பரிசோதித்து பார்த்தபோது, அதில் அச்சிடப்பட்டிருந்த காலாவதி தேதி 28 நவம்பர் 2025 என்று இருந்தது. அதாவது, அந்தப் பொருள் ஏற்கனவே காலாவதியாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு அவருக்கு விற்கப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஜுகல் கடந்த மார்ச் மாதம் இழப்பீடு வழங்கும்படி காங்ரா மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகினார். அப்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் அந்தப் புகாரை எதிர்த்து, பல ஆட்சேபனைகளை எழுப்பியது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வாதிட்டபோது, பிராண்ட் முத்திரையிடப்பட்ட அந்தப் பொருள் சீல் செய்யப்பட்ட, முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள் என்பதால், அதன் உறையில் காலாவதி தேதி தெளிவாக அச்சிடப்பட்டிருந்தது என்றும், வாங்குவதற்கு முன் அதைச் சரிபார்ப்பது வாடிக்கையாளரின் பொறுப்பு என்றும் அந்நிறுவனம் வாதிட்டது.
மேலும், பில் செலுத்துவதற்கு முன், நுகர்வோர் பொருளின் விவரங்களையும் காலாவதி தேதிகளையும் படிக்குமாறு, கடையின் உள்ளே அறிவிப்புகள் வைக்கப்பட்டிருந்ததையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.
நூடுல்ஸூக்கும் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் இடையேயான நேரடி தொடர்பை நிரூபிக்கும் வகையில், எந்த மருத்துவ ஆதாரமோ அல்லது ஆய்வக அறிக்கைகளோ சமர்ப்பிக்கப்படவில்லை என்று ரிலையன்ஸ் வாதிட்டது.
மேலும், அந்தத் தயாரிப்பு FSSAI விதிமுறைகளின் கீழ் பிராண்ட் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டதால், நூடுல்ஸ் உற்பத்தியாளரையும் புகாரில் ஒரு தரப்பாகச் சேர்த்திருக்க வேண்டும் என்றும் அது வாதிட்டது.
இந்நிலையில் இந்த புகார் ஹேமன்ஷூ மிஸ்ரா, நாராயணன் தாகூர் மற்றும் ஆர்த்தி சூட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது.
அப்போது, காலாவதி தேதிகளைச் சரிபார்க்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது என்ற கேள்விக்கு, ஆணையம் நேரடியாகப் பதிலளித்தது. காலாவதியான எந்த உணவுப் பொருளும் காட்சிப்படுத்தப்படவோ அல்லது விற்கப்படவோ இல்லை என்பதை உறுதி செய்வது ஒரு சில்லறை விற்பனையாளரின் முழுமையான மற்றும் மாற்ற முடியாத கடமையாகும் என்று ஆணையம் கூறியது.
வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஆய்வு செய்து, திறந்த அலமாரிகளில் இருந்து மளிகைப் பொருட்களை எடுக்கும்போது மறைவாக வைக்கப்பட்டுள்ள தேதிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நியாயமாக எதிர்பார்க்க முடியாது. கடைக்குள் ஒரு அறிவிப்பை ஒட்டுவதால் மட்டுமே அது சட்டப்பூர்வக் கடமையாக மாறிவிடாது.
நுகர்வோர் நடவடிக்கைகள் என்பவை அறிவியல் சான்றுகள் தேவைப்படும் குற்றவியல் விசாரணைகள் அல்ல என்று மருத்துவச் சான்று கோருவது குறித்து, ஆணையம் குறிப்பிட்டது. புகார்தாரர், தனது மகள் நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்ததாகக் கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
ஒரு சிறிய இழப்பீட்டுக் கோரிக்கைக்காக, ஒரு தந்தை தனது மைனர் குழந்தையின் நோய் குறித்துப் பொய்யாகப் புகார் அளிக்க மாட்டார் என்றும், விலைப்பட்டியலில் காலாவதியான பொருள் குறிப்பிடப்பட்டிருந்ததே ஒரு தெளிவான மீறல் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
உற்பத்தியாளர் ஒரு அவசியமான தரப்பினர் என்பது குறித்த வாதத்தை, சட்டரீதியாகப் பிழையானது எனக் கூறி ஆணையம் நிராகரித்தது. உற்பத்தியாளர், FSSAI விதிமுறைகளுக்கு இணங்கி, உறையின் மீது காலாவதித் தேதியைச் சரியாக அச்சிட்டிருந்தார். பிரச்சினை பொருளில் இல்லை, மாறாக ரிலையன்ஸ் தனது அலமாரிகளிலிருந்து காலாவதியான சரக்குகளை அகற்றத் தவறியதில்தான் இருந்தது. அது, சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட அலட்சியம் என்றும், அதனால் சில்லறை விற்பனையாளர் நேரடியாகவும் முழுமையாகவும் பொறுப்பாவார் என்றும் ஆணையம் கூறியது.
ஆணையம் புகாரை ஏற்றுக்கொண்டு, நூடுல்ஸின் முழு கொள்முதல் விலையையும் கிஷோருக்குத் திருப்பித் தருமாறு ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு உத்தரவிட்டது.
மேலும், அக்குடும்பம் அனுபவித்த மனவேதனை, பதட்டம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு இழப்பீடாக ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவுகளுக்காக ரூ.5,000 இழப்பீடு தொகையை சேர்த்து முழுத் தொகையையும் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.