சீனாவில் செல்லப் பிராணி விற்பனை வேகமாக வளர்ந்து வரும் வியாபாரச் சந்தை. அதிகமாக விற்கப்படும் செல்லப் பிராணி நாய்கள் மற்றும் பூனைகள். செல்லப் பிராணி விற்பனையில் சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2024ஆம் வருடத்தில் அமெரிக்க டாலர் 29 பில்லியனாக (2.5 இலட்சம் கோடி ரூபாய்) இருந்த சந்தை 2025இல் அமெரிக்க டாலர் 113.9411 பில்லியனுக்கு (10 இலட்சம் கோடி ரூபாய்) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில், பல விதமான அழுத்தங்களுக்கு வடிகால் செல்லப் பிராணி பராமரிப்பு. தாய், வளர்ப்பு நாயை எடுத்துக் கொஞ்ச, செவிலித் தாய் அந்த வீட்டுக் குழந்தையைக் கொஞ்சுகிறாள். தாயின் உணர்ச்சிகளுக்கு ஆதரவு வளர்ப்புப் பிராணிகள். அவற்றின் மீது அதீத ஆசை வைத்திருப்பவர்கள், எதிர்பாராமல், அவை இறந்து விட்டால் அதீத துயரத்திற்கு ஆளாகிறார்கள். வளர்ப்புப் பிராணியின் இறப்பு, பலருக்கும் நெருங்கிய குடும்ப உறவினர் இறப்பைப் போன்றே மனதை பாதிக்கிறது.
இவர்களின் துயரம், சிலரின் வியாபாரத்திற்கு முதலீடு. இவர்களின் வர்த்தகம் பெரும்பாலும் ஆன்லைனில் ஆரம்பிக்கிறது. நீங்கள், இறந்த செல்லப் பிராணிகளுடன் தொடர்பு கொள்ள நாங்கள் உதவுகிறோம், அவை எங்கே, எப்போது மறு பிறவி எடுத்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்கிறோம் என்று அதற்குத் தொகையாக நூற்றுக்கணக்கான டாலர்களை வசூலிக்கிறார்கள்.
தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையின் செய்தியின் படி, இந்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களை விலங்கு மன நோய் நிபுணர் என்று கூறிக்கொண்டு, சமூக ஊடக தளங்களிலும், தனியார்களின் வாட்ஸ்அப் குழுக்களிலும், தங்கள் சேவையை விளம்பரம் செய்கிறார்கள். பொதுவாக, மூன்று வகையான சேவையையும், அதன் கட்டணத்தையும் குறிப்பிடுகிறார்கள்.
அடிப்படை சேவை: இறந்த செல்லப் பிராணியிடம் தொடர்பு கொண்டு, ஐந்து கேள்விகள் கேட்பதற்கான கட்டணம் 128 யுவான். (1,551 ரூபாய்)
விசேட சேவை: ஆறு மாதங்கள். செல்லப் பிராணியிடம் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். இதற்கான கட்டணம் 2,999 யுவான். (36,348 ரூபாய்)
மறுபிறவி சேவை: இறந்த உங்கள் செல்லப் பிராணி மறுபடியும் பிறந்திருக்கிறதா? எங்கே பிறந்திருக்கிறது? கட்டணம் 899 யுவான் (10,896 ரூபாய்) முதல் 1,899 யுவான் (23,016 ரூபாய்) வரை.
இந்த சேவை அளிப்பவர்கள் பொதுவாக சில ஆறுதல் பதில்களைத் தருகிறார்கள். “உங்கள் செல்லப் பிராணி உங்கள் பிரிவால் வருந்துகிறது”. “மறு பிறவியில் உங்கள் பிராணி வசதியான இடத்தில் உள்ளது” இவ்வாறு சொல்லி, தினசரி சடங்குகள் உள்ள சேவையை வாங்கத் தூண்டுகிறார்கள்.
உங்கள் செல்லப் பிராணி கனவில் தோன்றி தன்னுடைய புது வாழ்வைத் தெரியப்படுத்தும் என்று சொல்லிப் பணம் வாங்கிக் கொள்கிறார்கள். நீங்கள் செல்லப் பிராணி கனவில் தோன்றுவதற்கு காத்திருக்க வேண்டும்.
அன்ரான் என்ற பெண், 128 யுவான் கொடுத்து, ஐந்து கேள்விகள் கேட்டாள். ஆனால், அதற்கு வந்த பதில்கள், அவளுடைய சமூக வலை தளத்தில் அவள் பதிவிட்டிருந்த விவரங்களை ஒத்திருந்தது. இருந்தாலும், மறுபிறவி சேவைக்கு 899 யுவான் செலவு செய்தாள். இறந்த அவளுடைய வளர்ப்புப் பிராணி கனவில் தோன்றும் வரை தினமும் பிரார்த்தனை செய்யச் சொன்னார், விலங்கு மனநிலை ஆலோசகர்.
கனவில் வளர்ப்புப் பிராணி வரவில்லை என்று கேட்டதற்கு கிடைத்த பதில், “உங்கள் உணர்ச்சி உறுதியாக இல்லை” “நீங்கள் நேர்மையாக முயற்சி செய்யவில்லை” என்பது. அவள் இணைந்திருந்த குழுவிலிருந்து அவள் தடுக்கப்பட்டாள்.
சிலர், குழுக்களில் இணைந்துப் பின்னர் பணம் செலுத்திய பின்னர், அந்தக் குழுவிலிருந்து நீக்கப்படுகிறார்கள். இதற்கு காவல் துறையில் புகார் செய்தாலும், சட்டச் சிக்கல் காரணமாக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. ஆன்லைன் மூலம் நடக்கும் இதைப் போன்ற மோசடிகளுக்கு அரசு முடிவு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சீனாவில் பெருகி வருகிறது.