
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே பணி நீக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், உலகளாவிய சந்தைகளில் அழுத்தம், செயற்கை நுண்ணறிவு (AI)ன் பயன்பாடு அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் ஒரு பகுதியாக அதிகளவிலான ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI)தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானால் ஐடி துறையில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. டிசிஎஸ், மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான், மெட்டா போன்ற பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டன.
அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏற்கனவே இந்தாண்டில் சுமார் 15,000 பேரை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், கடந்த மாதம் சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டிசிஎஸ் நிறுவனம். இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆரக்கிள் என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். 1977-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் வன்பொருள் (Hardware) நிறுவனங்களில் ஒன்றாகும். 2025ம் ஆண்டின் கணக்கின்படி ஆரக்கிள் நிறுவனம் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமாக வலம்வருகிறது.
இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, நொய்டா, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்களில் கிட்டத்தட்ட 28,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிறுவனம் அறிவித்துள்ள 3000 ஊழியர்களின் பணிநீக்கம் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் உள்ள நிபுணர்களை பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய பொறியாளர்கள் மற்றும் மேலாளர்கள் நீண்ட காலமாக ஆரக்கிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை உலகளவில் மேம்படுத்தி வந்துள்ளனர்.
சமீபத்தில், இந்த நிறுவனம் அமெரிக்காவில் 4.5 ஜிகாவாட் தரவு மைய திறனை வழங்குவதற்காக ஓப்பன் ஏஐ (OpenAI) உடன் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்தியாவில் சுமார் 10 சதவீத பணியாளர்களை, அதாவது 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிநீக்கத்திற்கு முக்கிய காரணமாக செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு அமைப்பதில் ஏற்படும் பெரும் செலவுகளை சமாளிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மென்பொருள் மேம்பாடு, கிளவுட் சேவைகள், வாடிக்கையாளர் ஆதரவு ஆகிய பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆட்குறைப்பு தலைமைப் பதவிகளையும் விட்டு வைக்கவில்லை, ஐடி துணைத் தலைவர், ஐடி இயக்குநர் மற்றும் மூத்த ஐடி மேலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கும் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது முதல் ஆட்குறைப்பு அல்ல, இதற்கு முன்னதாக 2023-ம் ஆண்டு ஆரக்கிள் நிறுவனம் இதேபோல் 3000 ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.