

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண்கள் பாதுகாப்பு என்பது இன்று வரையிலும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஆண்டுதோறும் பாலியல் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அவ்வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மாநகரங்களில் பெண்களின் பாதுகாப்பை முன்னெடுக்க ரோந்து பணிகளில் ஈடுபடுவதற்கு, 2025-26 காவல்துறை மானியக் கோரிக்கையில் இளஞ்சிவப்பு வாகனங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரூ.12 கோடி செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அமைதியைப் பேணிக் காத்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய பணிகளில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. காவல் துறலயின் பணிகள் மேலும் சிறக்க புதிய காவல் நிலையங்கள், பாதுகாப்பு பணிகளுக்காக வாகனங்களை கொள்முதல் செய்தல், காவலர் குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில் பெண்களின் பாதுகாப்பில் தனிகவனம் செலுத்தி, ரோந்து பணிகளில் காவல் துறையினர் ஈடுபட 12 கோடி ரூபாய் செலவில் சுமார் 80 பிங்க் நிற வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த வாகனங்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு வாகனங்கள் ஆவடி, தாம்பரம், கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருப்பூர், மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாநகரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும். பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் இரவு நேரங்களில் முழு வீச்சுடன் செயலாற்றும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் நகை பறிப்பு வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதோடு சிறுமிகள் கடத்தப்படுவதும் கடந்த காலங்களில் அதிகரித்திருப்பதால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளஞ்சிவப்பு வாகனங்கள், விழிப்புடன் செயல்பட்டு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வருங்காலங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் இளஞ்சிவப்பு வாகனங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.