
ஆசியய கண்டத்தின் வற்றாத ஜீவநதிகளில் முக்கியமானது பிரம்மபுத்ரா. இது திபெத்திய எல்லையில் தொடங்கி சீனா, இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் மீக நீண்ட நதியாக ஆங்காங்கே ஒரு பெயருடன் பாய்ந்தோடுகிறது. இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் முக்கிய நீராதாரமாக இருக்கும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை ஒன்றை கட்ட சீனா முற்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளையும் சீனா தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவும், வங்கதேசமும் மிகப்பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.
சீனாவில் பாயும் யார்லூங் சாங்போ ஆற்றில் மோடு புனல் மின்நிலைய அணையைக் கட்டுவதற்கான தொடக்க விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் சீனப் பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார். இந்தத் திட்டத்திற்கு 1.67 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது சீனா. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், த்ரி கோர்ஜஸ் அணையைக் காட்டிலும் பெரிதாகவும், 3 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும். சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகள் கவலையில் உறைந்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிட்யூட் எனும் சிந்தனைக் குழு, பிரம்மபுத்ரா நதியின் மீது சீனா அணையைக் கட்டினால், இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவும் சீனாவால் முடியும் என கடந்த 2020இல் தெரிவித்தது. எல்லையைத் தாண்டி தெற்கு திசை நோக்கி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் முக்கிய நீராதாரமான யார்லூங் சாங்போ ஆற்றை சீனா கட்டுப்படுத்தி விட்டால், அது மிகப்பெரும் பேரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அணையின் கட்டுமானம் நிறைவடையும் பட்சத்தில், சியாங், பிரம்மபுத்ரா மற்றும் ஜமுனா ஆகிய நதிகள் கணிசமான அளவில் வறண்டு விடும். இதனால் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். அதோடு திடீரென சீனா அணையைத் திறந்து விட்டால், நதியின் ஓட்டத்தின் கீழே இருக்கும் இயற்கை வளங்களும், பழங்குடியின மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியா மற்றும் வங்கதேசத்தை எதிர்க்க சீனா மோடு புனல் மின்நிலைய அணையை ஒரு நீர் ஆயுதமாகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதுகுறித்த தனது கவலையை இந்தியா, சீனாவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டது.
இதற்கு அணை கட்டுவது எங்களின் சட்டப்பூர்வ உரிமை; அதோடு கீழே ஏற்படும் தாக்கத்தைப் பற்றியும் கருத்தில் கொண்டுள்ளோம் என சீனா பதிலளித்தது. வங்கதேசமும் கடந்த பிப்ரவரியில் அணை குறித்த தங்களது கவலையை சீனாவுக்கு கடிதம் மூலமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கட்டப்பட உள்ள அணைக்கு கீழே புதிய மின்நிலைய அணையைக் கட்ட இந்தியாவும் தற்போது திட்டமிட்டுள்ளது. சீனா அணையைத் திறந்து விட்டால், சியாங் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுக்க இந்தியா கட்டப்போகும் அணை உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார்லுங் சாங்போ நம்சா பர்வா மலையைச் சுற்றியுள்ள ‘தி கிரேட் பெண்ட்’ என அழைக்கப்படும் யு (U) வளைவுப் பகுதியில் தான் சீனா அணையைக் கட்யவுள்ளது. சுரங்கங்கள் மூலம் தண்ணீரை திசை திருப்பி, 5 அடுக்கடுக்கான மின் நிலையங்களை உருவாக்க சீனப் பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த அணையின் மூலமாக கிடைக்கும் மின்சாரம் திபெத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, கிழக்கு மாகாணங்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பே சீனா புனல் மின்நிலைய அணையைக் கட்ட முடிவெடுத்தது. அதற்கு திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சிறைக்கும் சென்றனர். இந்தப் பிரச்சினை தற்போது முடிவடைந்த நிலையில், மீண்டும் புனல் மின்நிலைய அணையைக் கட்ட சீனா மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த அணை திபெத்திய பள்ளத்தாக்குகளை வெள்ளப் பெருக்கில் மூழ்கடிக்க அதிக வாய்ப்புள்ளது; பூகம்ப பிளவு கோடுகள் இருக்கும் பகுதியில் அணையைக் கட்டுவதால் இயற்கை வளங்களும் பாதிக்கப்படும்.
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு சீனாவின் புனல் மின்நிலைய அணையைத் திறந்தாலும் பிரச்சினை; திறக்கவில்லை என்றாலும் பிரச்சினை. ஆகையால் இரு நாடுகளும் இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்தது.