

தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், வங்கி சேவைகள் முதல் ஷாப்பிங் வரை அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன. பொதுமக்கள் யாரும் வெளியில் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லாத வகையில், வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
சமீபத்தில் வீட்டிலிருந்தே ஆன்லைன் வழியாக பத்திரப் பதிவு செய்யும் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அவ்வகையில் வீட்டிலிருந்தே வங்கி கணக்குகளை மூடவும் பல வங்கிகள் அனுமதிக்கின்றன. இருப்பினும் இது குறித்த விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியாக வங்கி கணக்குகளை எப்படி மூட வேண்டும்? அதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். ஆனால் அனைத்து கணக்குகளையும் பயன்படுத்துவதில்லை. வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறினால், அபராதம் விதிக்கப்படும். அதோடு ஏடிஎம், காசோலை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனை எல்லாம் தவிர்க்க தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை மூடுவது தான் சிறந்தது. முன்பெல்லாம் வங்கி கணக்குகளை மூட வேண்டும் என்றால், நேரடியாக வங்கி கிளைக்கு சென்று படிவத்தை நிரப்பி, ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் இனி வங்கிக் கணக்கை வீட்டிலிருந்தே மூட பல வங்கிகள் அனுமதிக்கின்றன.
வங்கி கணக்கை மூடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
1. முதலில் உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருப்பு உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அந்தத் தொகையை வேறு கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் அல்லது முழுவதுமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. உங்கள் வங்கி கணக்கின் கடந்த 2 முதல் 3 வருட ஸ்டேட்மென்ட்டை சரி பார்த்து, பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் வருமான வரித் தாக்கல் செய்யும்போது இந்த ஸ்டேட்மெண்ட் உதவியாக இருக்கும்.
3. ஏதேனும் செலுத்த வேண்டிய மீதித்தொகை, சேவை கட்டணங்கள் மற்றும் மாதத் தவணைகளை செலுத்தி விடுங்கள். செலுத்த வேண்டிய தொகை ஏதேனும் மீதம் இருந்தால் உங்கள் வங்கிக் கணக்கை மூட முடியாது.
4. சில ஆன்லைன் சேவைகளுக்கு தானியங்கி முறையில் கட்டணம் செலுத்தும் முறையை பின்பற்றி வந்தால், இந்த தானியங்கி முறையை ரத்து செய்து விட வேண்டியது அவசியம்.
5. வங்கிக் கணக்கை மூடும் போது, கட்டணம் வசூலிக்கப்படலாம். குறிப்பாக கணக்கு தொடங்கிய ஓராண்டுக்குள் அதனை மூடினால், நிச்சயமாக வங்கிகள் கட்டணத்தை வசூலிக்கும்
ஆன்லைனில் வங்கி கணக்கை மூடும் வழிமுறைகள்:
1. முதலில் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும்.
2. கணக்கு சேவைகள் (Account Services) அல்லது சேவை கோரிக்கைகள் (Service Requests) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. Close Bank Account என்பதை கிளிக் செய்து, வங்கி கணக்கை மூடுவதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு, டிஜிட்டல் கணக்கு மூடல் படிவத்தை நிரப்ப வேண்டும்.
4. இப்போது கோரிக்கை விண்ணப்பம் மற்றும் அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5. பிறகு மொபைல் ஓடிபி அல்லது மின்னஞ்சல் ஓடிபி சரிபார்ப்பு மூலம், வங்கி கணக்கு மூடலை உறுதி செய்ய வேண்டும்.
6. அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு வங்கி கணக்கு மூடலுக்கான உறுதிப்படுத்தல் குறுந்தகவல் வரும். அதன் பிறகு வங்கிகள் உங்கள் கோரிக்கையை ஏற்று, செயல்படுத்த ஒருசில நாட்கள் ஆகலாம் அதுவரை நீங்கள் காத்திருப்பது அவசியம்.
வங்கி கணக்கு மூடலுக்கான கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு வங்கிகள் உங்களின் பயன்படுத்தப்படாத ஏடிஎம் கார்டு மற்றும் காசோலை புத்தகத்தை நேரில் வந்து கொடுக்கும்படி சொல்லலாம். மேலும் சரிபார்ப்புக்காகவும் நேரில் அழைக்கலாம். இதுபோன்ற சமயங்களில் மட்டும் நேரில் செல்ல வேண்டியிருக்கும்.
மேலும் வங்கிக் கணக்கை மூடிய பிறகு உங்களின் டெபிட் கார்டு மற்றும் காசோலை புத்தகத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது மிகவும் நல்லது. வங்கிக் கணக்கை மூடிய பிறகு, சில நாட்களுக்கு ஏதேனும் பரிவர்த்தனைகள் நிகழ்கிறதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஏனெனில் பண மோசடிகள் அதிகம் நடக்கும் இன்றைய சூழலில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.